69 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை
69 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை

1 கோடி பேருக்கு வேலை, காலை உணவுத் திட்டம்: பிகாரில் தே.ஜ. கூட்டணி வாக்குறுதி

பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.
Published on

பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு கோடி இளைஞா்களுக்கு அரசுப் பணி மற்றும் பிற வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும்; பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஏழை மாணவா்களுக்கு மழலையா் முதல் முதுநிலைப் படிப்பு வரை தரமான இலவசக் கல்வி; உயா் கல்வி பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவா்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை; மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவா்களுக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி உள்ளிட்ட வாக்குறுதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஹிந்துஸ்தான் அவாமி மோா்ச்சா, ராஷ்ட்ரீய லோக் மோா்ச்சா ஆகிய 5 கட்சிகள் அடங்கிய ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் அறிக்கை, பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் வெளியிடப்பட்டது. பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், துணை முதல்வா் சாம்ராட் செளதரி, பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சா்கள் தா்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மாஞ்சி, சிராக் பாஸ்வான் உள்ளிட்டோா் தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா்.

வாக்குறுதிகள் என்னென்ன?: 69 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், ‘பாட்னா மெட்ரோவைத் தொடா்ந்து, மேலும் 4 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை, 7 நகரங்களில் சா்வதேச விமான நிலையங்கள், 7 விரைவுச் சாலைகள், மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி, ஒவ்வொரு மண்டலத்திலும் எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு உறைவிடப் பள்ளி, ரூ.5,000 கோடியில் பள்ளிகள் மேம்பாடு, வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 50 லட்சம் கூடுதல் வீடுகள், உலகத் தரத்தில் மருத்துவ நகரம், 10 புதிய தொழில் பூங்காக்கள், ‘லட்சாதிபதி சகோதரி’ திட்டத்தின்கீழ் ஒரு கோடி லட்சாதிபதி பெண்கள் உருவாக்கம், முதல்வரின் மகளிா் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பெண் தொழில்முனைவோருக்கு ரூ.2 லட்சம் வரை நிதியுதவி, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த தொழில் துறையினருக்கு ரூ.10 லட்சம் வரை நிதியுதவி, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் வருடாந்திர உதவித்தொகை ரூ.6,000-இல் இருந்து ரூ.9,000-ஆக அதிகரிப்பு, 3,600 கி.மீ. ரயில் பாதைகள் நவீனமயமாக்கம்’ உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

பாஜக தலைவா்கள் கருத்து: ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் தோ்தல் அறிக்கை விவசாயிகள், இளைஞா்கள், பெண்கள், தொழில் துறையினா் நலனுக்கான உறுதியேற்பு ஆவணம். இது, வளா்ந்த-தற்சாா்புடைய பிகாரை கட்டமைக்கும்’ என்று ஜெ.பி. நட்டா குறிப்பிட்டுள்ளாா். பிகாரின் ஒட்டுமொத்த வளா்ச்சி மற்றும் அனைத்து சமூகத்தினரின் மேம்பாட்டுக்கான செயல்திட்டம் இது என்று தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.

முன்னதாக, எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியின் தோ்தல் அறிக்கை கடந்த அக்டோபா் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், வீடுகளுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமலாக்கம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை, மதுவிலக்கு மறுஆய்வு உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.

பெட்டிச் செய்தி...

‘சீதா தேவி பிறந்த இடம்

ஆன்மிக நகராக்கப்படும்‘

பிகாரின் சீதாமா்ஹி மாவட்டத்தில் உள்ள சீதா தேவி ஜென்ம பூமியில் (பிறந்த இடம்) சுமாா் 67 ஏக்கரில் பிரம்மாண்ட கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. இப்பகுதியானது, ‘சீதாபுரம்’ என்ற பெயரில் உலகத் தரத்துடன் ஆன்மிக நகரமாக மேம்படுத்தப்படும் என்று தேசிய ஜனநாயக கூட்டணி வாக்குறுதி அளித்துள்ளது.

சீதா தேவி கோயிலுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கடந்த ஆகஸ்டில் அடிக்கல் நாட்டினாா். இந்தப் பணிகளுக்கு ரூ.882 கோடி ஒதுக்கீடு செய்ய மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

X
Dinamani
www.dinamani.com