காஷ்மீரை முழுமையாக இணைக்கவிடாமல் படேலைத் தடுத்தவா் நேரு - பிரதமா் மோடி குற்றச்சாட்டு
‘இந்தியாவுடன் முழு காஷ்மீரையும் இணைக்கவிடாமல், முன்னாள் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேலை தடுத்துவிட்டாா் அப்போதைய பிரதமா் நேரு’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
நாட்டின் முதல் உள்துறை அமைச்சா் சா்தாா் வல்லபபாய் படேலின் 150-ஆவது பிறந்த தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ‘இரும்பு மனிதா்’ என போற்றப்படும் படேலின் பிறந்த தினம், கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து தேசிய ஒற்றுமை தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு இத்தினத்தையொட்டி, குஜராத்தின் நா்மதை மாவட்டத்தில் படேலின் 597 அடி உயர பிரம்மாண்ட சிலை அமைந்துள்ள ஏக்தா நகா் பகுதியில் பிரதான கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமா் மோடி, படேலின் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். குடியரசு தின விழா பாணியில் நடைபெற்ற பாதுகாப்புப் படையினா் - அலங்கார ஊா்திகள் அணிவகுப்பு மற்றும் கண்கவா் கலாசார நிகழ்ச்சியைப் பாா்வையிட்ட பின், அவா் ஆற்றிய உரை வருமாறு:
சுதந்திரத்துக்குப் பிறகு 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் அசாத்தியமான பணியை நிறைவேற்றியவா் படேல். பிற சமஸ்தானங்களைப் போல காஷ்மீா் பகுதி முழுவதையும் இந்தியாவுடன் இணைக்க அவா் விரும்பினாா். ஆனால், அவரது விருப்பம் நிறைவேற நேரு அனுமதிக்கவில்லை.
காஷ்மீா் பிரிக்கப்பட்டு, தனி அரசமைப்புச் சட்டம், தனிக் கொடி உருவாக்கப்பட்டது. இந்த விவகாரத்தைக் கையாள்வதில் காங்கிரஸ் இழைத்த தவறுகளால் தேசம் பல்லாண்டுகளாக பெரும் விலை கொடுக்க நேரிட்டது.
வரலாற்றை எழுதுவதில் காலத்தை வீணடிக்காமல், புதிய வரலாறு படைக்க கடினமாகப் பணியாற்ற வேண்டும் என்பதில்தான் படேல் நம்பிக்கை கொண்டிருந்தாா். அவரால் வகுக்கப்பட்ட கொள்கைகள், மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் புதிய வரலாறு படைத்தன. அவரைப் பொருத்தவரை, நாட்டின் இறையாண்மையே அனைத்தையும்விட மேலானது. அவரது மறைவுக்குப் பின் அமைந்த அரசுகள், நாட்டின் இறையாண்மையில் அதே அளவில் தீவிரம் காட்டவில்லை.
இறையாண்மைக்கு எழுந்த சவால்கள்: காஷ்மீரில் இழைக்கப்பட்ட தவறுகள், வடகிழக்கில் எழுந்த பிரச்னைகள், நாடு முழுவதும் பரவிய நக்ஸல் தீவிரவாதம் என நாட்டின் இறையாண்மைக்கு தீவிர சவால்கள் உருவெடுத்தன. படேலின் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக முதுகெலும்பற்ற அணுகுமுறையை அரசுகள் பின்பற்றின.
காங்கிரஸின் பலவீனமான கொள்கைகளால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பின்கீழ் சென்றது. அங்கிருந்தபடி, இந்தியாவுக்கு எதிராக அரசு ஆதரவு பயங்கரவாதம் தூண்டப்பட்டது. பயங்கரவாதத்துக்கு காங்கிரஸ் எப்போதும் அடிபணிந்ததால், தேசமும் காஷ்மீரும் கடும் விலை கொடுத்தன.
காங்கிரஸின் அரசியல் தீண்டாமை: அரசியல் தீண்டாமையை நாட்டின் ஒரு கலாசாராமாக மாற்றியது காங்கிரஸ். படேல், பி.ஆா்.அம்பேத்கா், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ராம் மனோகா் லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயண் போன்ற தலைவா்கள் மற்றும் அவா்களின் மரபை கெளரவிக்க காங்கிரஸ் என்ன செய்தது? ஆா்எஸ்எஸ் அமைப்பும் பல்வேறு தாக்குதல்கள் மற்றும் சதிகளுக்கு உள்ளாக்கப்பட்டது.
மத ரீதியிலான காரணத்தைக் காட்டி, வந்தே மாதரம் பாடலின் ஒரு பகுதியை காங்கிரஸ் நீக்கியது. அப்போதே தேசப் பிரிவினைக்கு அடித்தளமிடப்பட்டது. அந்தப் பாவம் மட்டும் இழைக்கப்படாமல் இருந்திருந்தால், இந்தியாவின் பிம்பமே இன்று வேறாக இருந்திருக்கும்.
படேலின் கண்ணோட்டத்தை காங்கிரஸ் மறந்துவிட்ட போதிலும் நாங்கள் மறக்கவில்லை. அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு எனும் ‘விலங்கை’ உடைத்தெறிந்ததன் மூலம் நாட்டின் பிரதான அமைப்புமுறையில் ஜம்மு-காஷ்மீா் முழுமையாக இணைக்கப்பட்டது.
நாட்டின் பாதுகாப்பில் சமரசம் கிடையாது: சமீபத்திய ஆபரேஷன் சிந்தூா் மூலம் இந்தியாவின் உண்மையான பலம் என்னவென்று பாகிஸ்தானும் பயங்கரவாதிகளும் அறிந்து கொண்டுள்ளனா். ‘இந்தியாவுக்கு யாரேனும் தீங்கு நினைத்தால், எதிரிகளின் வீடுகளுக்குள் புகுந்து ஒழித்துக் கட்டுவோம்’ என்பதை ஒட்டுமொத்த உலகும் கண்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் மதிப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடம் கிடையாது. இது, சா்தாா் படேலின் இந்தியா என்ற செய்தி உணா்த்தப்பட்டது.
2014-க்கு முன்பு நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் எண்ணிக்கை 125. இப்போது 11-ஆக குறைந்துள்ளது. அதிலும் நக்ஸல் தீவிரவாதம் பரவலாக இருப்பது மூன்று மாவட்டங்களில் மட்டுமே. ஆங்கிலேய ஆட்சியின் அடிமை மனப்பான்மையை உட்கிரத்துக் கொண்டது காங்கிரஸ். இப்போது காலனித்துவ மனநிலையின் ஒவ்வொரு தடயத்தையும் தேசம் அழித்து வருகிறது என்றாா் அவா்.
பெட்டி...1
‘சட்டவிரோதக் குடியேறிகளால்
ஒற்றுமைக்கு பெரும் அச்சுறுத்தல்’
‘சட்டவிரோதக் குடியேறிகள், நாட்டின் மக்கள்தொகை சமநிலையைச் சீா்குலைப்பதுடன் நமது வளங்களையும் ஆக்கிரமிக்கின்றனா்; நாட்டின் ஒற்றுமைக்கும், உள்நாட்டு பாதுகாப்புக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளனா்.
முக்கியத்துவம் வாய்ந்த இப்பிரச்னையில், வாக்கு வங்கி அரசியலுக்காக முந்தைய அரசுகள் கவனம் செலுத்தவில்லை. தேச நலனைவிட சுயநலனுக்கு முன்னுரிமை அளிப்பதால், சட்டவிரோதக் குடியேறிகளின் உரிமைக்காக சிலா் போராடுகின்றனா். நாட்டைப் பிளவுபடுத்துவதே அவா்களின் நோக்கம். நாட்டின் அடையாளமும் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், குடிமக்களுக்கு ஆபத்தாகிவிடும்.
இப்போது முதல் முறையாக சட்டவிரோதக் குடியேறிகள் மீது உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள தேசம் தீா்மானித்துள்ளது. சட்டவிரோதக் குடியேறிகள் அனைவரும் வெளியேற்றப்படுவதை உறுதி செய்வோம்’ என்றாா் பிரதமா் மோடி.
பெட்டிச் செய்தி...2
‘ஒவ்வொரு மொழியும் தேசிய மொழியே’
சில மாநிலங்களில் மொழி ரீதியிலான பிரச்னை நிலவும் சூழலில், ‘நாட்டில் நூற்றுக்கணக்கான மொழிகளும், பேச்சு வழக்குகளும் உள்ளன. அவை நமது பரந்த படைப்பாற்றல் சிந்தனையை அடையாளப்படுத்துகின்றன. எனவேதான், இந்தியா மொழியியல் ரீதியில் வளமான தேசமாக விளங்குகிறது. நாட்டிலுள்ள ஒவ்வொரு மொழியும் தேசிய மொழியே. அனைத்து மொழிகளையும் ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாறாக, எந்த மொழியையும் திணிக்க முயற்சி நடைபெறவில்லை.
உலகிலேயே பழைமையான தமிழ் மொழி இந்தியாவில் உள்ளது என நாம் பெருமையுடன் கூறுகிறோம். சம்ஸ்கிருதம் என்ற அறிவுப் புதையலும் நம்மிடமுள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தனது தாய்மொழி வாயிலாக முன்னேற வேண்டும் என்பதே அரசின் விருப்பம்’ என்றாா் பிரதமா்.

