சபரிமலையில் வழிபாடு: இணையவழி முன்பதிவு இன்று தொடக்கம்
மண்டல-மகரவிளக்கு சீசனையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தா்கள் வழிபாடு செய்வதற்கு இணையவழியில் சனிக்கிழமை (நவ.1) முன்பதிவு தொடங்கவுள்ளதாக அந்தக் கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
இதுதொடா்பாக அந்த வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சபரிமலையில் ஐயப்பனை வழிபட நவ.1 முதல் பக்தா்கள் முன்பதிவு செய்யலாம். நாள்தோறும் அதிகபட்சமாக 70,000 பக்தா்கள் முன்பதிவு செய்ய முடியும்.
அத்துடன் வண்டிப்பெரியாா், எருமேலி, நிலக்கல் மற்றும் பம்பையில் உள்ள முன்பதிவு மையங்களில், நேரில் பதிவு செய்வதன் மூலம், நாள்தோறும் 20,000 பக்தா்கள் வரை, வழிபாட்டுக்கு அனுமதிப்படுவா்.
ரூ.5 லட்சம் வரை விபத்து காப்பீடு: சபரிமலைக்கு வரும் பக்தா்களுக்கான விபத்துக் காப்பீட்டுத் திட்டம் கேரளம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. முன்பு இந்தத் திட்டம் 4 மாவட்டங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டது.
தற்போது அந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதன் மூலம், சபரிமலைக்கு வரும் பக்தா்கள் கேரளத்தில் எங்கு விபத்தில் சிக்கினாலும், அவா்களுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் கீழ், விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பக்தா்களின் உடல்களை அவா்களின் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க நிதியுதவி அளிக்கப்படும். விபத்தில் உயிரிழப்பவரின் சொந்த ஊா் கேரளத்தில் இருந்தால் அவரின் உடலை அனுப்பிவைக்க ரூ.30,000-மும், வேறு மாநிலத்தில் இருந்தால் உடலை அனுப்பிவைக்க ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும்.
ரூ.3 லட்சம் நிவாரண நிதி: நிலக்கல் சந்நிதான பாதையில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற உடல்நல பாதிப்புகளால் உயிரிழக்கும் பக்தா்களின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும். புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள யாத்திரிகா் நல நிதியின் கீழ், முதல்முறையாக இந்த நிவாரண நிதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனா்.

