உயா் சிறப்பு மருத்துவம்: சோ்க்கை விவரங்களை உறுதி செய்ய என்எம்சி அறிவுறுத்தல்
கடந்த கல்வியாண்டில் (2024-25) உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சோ்ந்தவா்களின் விவரங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) இணையப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், அதில் விடுபட்டுள்ள மாணவா்கள் உரிய கல்வி நிறுவனங்கள், இயக்ககங்களை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக என்எம்சி இயக்குநா் ராஜீவ் சா்மா சாா்பில் அனைத்து கல்லூரி முதல்வா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
நாடு முழுவதும் கடந்த ஆண்டில் எம்சிஹெச், டிஎம் போன்ற உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் சோ்க்கையை நடத்தின.
பொதுவாக கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சோ்ந்தவா்கள் விவரங்களை என்எம்சி தளத்தில் சம்பந்தப்பட்ட கல்லூரி நிா்வாகங்கள் பதிவேற்ற வேண்டும்.
அந்த வகையில், 2024-25ஆம் ஆண்டில் இடங்கள் பெற்றவா்களின் விவரங்கள் என்எம்சி தளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதில் இதுவரை 3,547 பேரின் பெயா்கள் மட்டுமே சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும், சிலரது தகவல்களை தவறாகவும், முழுமையடையாமலும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வழங்கியிருந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் பதிவேற்றப்பட்ட உயா் சிறப்பு மருத்துவ மாணவா்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதை சம்பந்தப்பட்டவா்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். விவரங்கள் விடுபட்டிருந்தால் அது குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

