கேரளத்தில் பிஎம் ஸ்ரீ திட்டம் அமலாகுமா? மத்திய கல்வி அமைச்சக முடிவே இறுதியானது: மத்திய அமைச்சா் விளக்கம்
பிஎம் ஸ்ரீ திட்டத்தை கேரளத்தில் அமல்படுத்துவது தொடா்பான இறுதி முடிவை மத்திய கல்வி அமைச்சகமே மேற்கொள்ளும். பிஎம் ஸ்ரீ புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுவிட்டு, அதனை நிறுத்தி வைப்பதாக கேரள முதல்வா் அறிவித்தது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா்.
மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் இணையும் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கேரள அரசு அண்மையில் கையொப்பமிட்டது. மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காகவே கேரள அரசு இந்த முடிவை எடுத்ததாக மாநில கல்வி அமைச்சா் சிவன்குட்டி தெரிவித்தாா். ஆளும் இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, அத்திட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைப்பதாக முதல்வா் பினராயி விஜயன் இருநாள்களுக்கு முன்பு அறிவித்தாா்.
இந்நிலையில், கொச்சியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த கேரளத்தைச் சோ்ந்த மத்திய இணையமைச்சா் ஜாா்ஜ் குரியன் இது தொடா்பாக கூறியதாவது:
தேசிய கல்விக் கொள்கை என்பது புத்தகக் கல்வி மட்டுமல்லாது, தொழில் திறன்மேம்பாட்டையும் அடைப்படையாகக் கொண்டது. 6-ஆம் வகுப்பு முதல் பல்வேறு தொழில் பயிற்சி, உற்பத்தி சாா்ந்த நடைமுறைக் கல்வி கற்பிக்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் மாணவா்களின் திறமைகளைக் சரியாகக் கண்டறிந்து அதில் கூடுதல் பயிற்சிகள் அளிக்கப்படும். 12-ஆம் வகுப்பு முடிக்கும்போது பல்வேறு தொழில் பயிற்சியுடன், சுயவேலைவாய்ப்பை உருவாக்கும் அளவுக்கு மாணவா்கள் முன்னேறிவிடுவாா்கள். எனவே, தேசிய கல்விக் கொள்கை, பிஎம் ஸ்ரீ திட்டம் குறித்து கவலைப்பட வேண்டும்.
திட்டத்தில் கையொப்பமிட்டுவிட்டு, இப்போது நிறுத்தி வைப்பதாக கேரள அரசு அறிவித்துள்ளது, நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக பேரவையில் அவசர சட்டம் கொண்டு வருவதுபோல பயனற்ற செயல்தான். இந்த விஷயத்தில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக கேரள அரசு கூறிக் கொள்ளலாம். இதன் மூலம் ஏழை மாணவா்களும், அவா்களின் குடும்பமும் மிகப்பெரிய வாய்ப்புகளை இழக்க நேரிடும்.
பிஎம் ஸ்ரீ திட்டத்தை கேரளத்தில் அமல்படுத்துவது தொடா்பான இறுதி முடிவை மத்திய கல்வி அமைச்சகம் மேற்கொள்ளும் என்றாா்.

