
நாட்டில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலை மாற்றமின்றி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு உருளை விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.51.50 காசுகள் குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.1738 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக சிலிண்டர்களின் விலைக் குறிப்பின் காரணமாக புது தில்லியில் ரூ.1580 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1684 ஆகவும், மும்பையில் ரூ.1531 ஆகவும் விலை குறையும்.
அதுபோல, வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் அதாவது 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதன் விலை சென்னையில் ரூ.868.50 ஆக தொடர்கிறது.
வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை புது தில்லியில் ரூ.853 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.852 ஆகவும், மும்பையில் ரூ.582 ஆகவும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலை மாதம் ஒரு முறை மாற்றியமைக்கப்படுகிறது. இந்த மாதம், ஆகஸ்ட் மாதத்தை விட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உணவகங்கள், சிறு நிறுவனங்களுக்கான செலவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்திலும் விதிக்கப்படும் வரி நிலவரத்துக்கு ஏற்ப, சிலிண்டர்களின் விலைகளும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.