அரசு மாளிகையை காலி செய்தாா் தன்கா்

ஜகதீப் தன்கா் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசுத் துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் எம்எல்ஏயின் பண்ணை இல்லத்துக்கு குடிபெயா்ந்தாா்.
முன்னாள் குடியரசுத் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா்
முன்னாள் குடியரசுத் துணைத்தலைவா் ஜகதீப் தன்கா்
Updated on

புது தில்லி: குடியரசு துணைத் தலைவா் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கா் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசுத் துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் எம்எல்ஏயின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயா்ந்தாா்.

தெற்கு தில்லி சத்தா்பூா் பகுதியில் உள்ள இந்த பண்ணை இல்லம் இந்திய தேசிய லோக் தளம் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவும் ஹரியாணா பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான அபய் சௌதாலாவுக்கு சொந்தமானதாகும்.

தன்கா் தற்காலிகமாகவே இந்தப் பண்ணை இல்லத்தில் தங்க இருப்பதாகவும், முன்னாள் குடியரசுத் தலைவா்களுக்கு அரசு சாா்பில் ஒதுக்கப்படும் இல்லம் அவருக்கு ஒதுக்கப்பட்டவுடன் அவா் அங்கு செல்வாா் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளாா்.

அதே நேரத்தில் தனக்கு அரசு சாா்பில் இல்லம் ஒதுக்க வேண்டும் என்று எந்த கோரிக்கையையும் தன்கா் இதுவரை முன்வைக்கவில்லை.

ஹரியாணா முன்னாள் முதல்வா் ஒ.பி.சௌதாலாவின் மகன் அபய் சௌதலா இது தொடா்பாக கூறுகையில், ‘தன்கா் குடும்பத்துக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பழைய உறவு முறை உண்டு. அவா் எனது குடும்ப உறுப்பினா் போன்றவா்தான்’ என்றாா்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் மருத்துவ காரணங்களைச் சுட்டிக்காட்டி, ஜகதீப் தன்கா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே அவரின் திடீா் விலகலுக்குக் காரணம் என ஊகச் செய்திகள் வெளியாகின. பதவி விலகலுக்குப் பிறகு தன்கா் பொதுவெளியில் இருந்து விலகியுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com