
ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ஷார்ஜாவில் உயிரிழந்த கேரள இளம்பெண் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாமலே உயிரிழந்தார் என்பதற்கு வலுசேர்க்கும் விதத்தில் தற்போது விடியோ ஆதாரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தைச் சேர்ந்த இளம்பெண் அதுல்யா சேகர்(30), ஷார்ஜாவில் தனது கணவர் சதீஷ் சிவசங்கரன் பிள்ளை மற்றும் 10 வயது குழந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், அவரது 30-ஆவது பிறந்தநாளான கடந்த ஜூலை 19-ஆம் தேதி அவர் தமது வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். அதன்பின் அவரை பரிசோதித்ததில் அவர் உயிரிழந்துவிட்டார் என்பது மருத்துவர்களால் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மரணம் தொடர்பாக கேரளத்தில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதுல்யாவின் மரணத்துக்கு அவரது கணவரே முக்கிய காரணமென அதுல்யாவின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவரது கணவர் கேரளத்துக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
அதன்பின், வெளியான அதுல்யாவின் உடற்கூராய்வில் அவர் தற்கொலையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கணவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அதுல்யா சேகர் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு அதனை தாங்கிக் கொள்ள முடியாமலே உயிரிழந்தார் என்பதற்கு வலுசேர்க்கும் விதத்தில் தற்போது விடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது.
அதில், அவரது கணவர் அவரை பெல்ட்டால் அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்குவதும், அநாகரிக சொற்களைப் பயன்படுத்தி அவரை மன வேதனைக்கு ஆளாக்கியிருப்பதும் பதிவாகியுள்ளது. மேலும் பதிவான காட்சிகளில் அதுல்யா கடந்த பத்தாண்டுகளாக உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் கணவரால் கொடுமைப்படுத்தப்பட்டிருப்பதாக பேசியிருக்கிறார்.
இதனிடையே, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக அதுல்யாவின் கைப்பேசியில் பதிவாகியுள்ள தரவுகள் இருக்கும் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த கைப்பேசி தற்போது போலீஸார் வசம் உள்ள நிலையில், அதிலுள்ள தரவுகள் ஆராயப்படும்போது மேலும் பல உண்மைகள் தெரிய வரும் என்கின்றனர்.
இந்த நிலையில், இந்த விடியோ ஆதாரத்தை வைத்து அவரது கணவரை மீண்டும் கைது செய்து விசாரிக்க அதுல்யா குடும்ப தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.