
கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சோன்பிரயாக் மற்றும் கௌரிகுண்ட் இடையே முன்கட்டியா அருகே இன்று காலை காலை 7.34 மணிக்கு இந்த விபத்து நடந்தது.
முன்கட்டியா மலைப்பகுதியில் இருந்து பாறைகள் உருண்டதில் சாலையோரம் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தின் மீது மோதியதில், இரண்டு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்று ருத்ரபிரயாக் மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் தெரிவித்தார்.
மேலும், வாகனத்தில் பயணித்த 6 பேர் காயமடைந்தனர், இருவர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று அவர் கூறினார்.
காயமடைந்தவர்கள் சோன்பிரயாக்கில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்குப் பலத்த காயமடைந்த இருவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
உத்தரகாஷி மாவட்டத்தில் உள்ள பர்கோட்டைச் சேர்ந்த ரீட்டா (30) மற்றும் சந்திர சிங் (68) என இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
காயமடைந்தவர்கள் உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்த மோஹித் சௌகான், நவீன் சிங் ராவத், பிரதிபா, மம்தா, ராஜேஸ்வரி மற்றும் பங்கஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உத்தரகண்டில் மழை சீற்றத்தால் தினமும் பலர் உயிரிழந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை தெஹ்ரி மற்றும் பித்தோராகர் மாவட்டங்களில் மழை தொடர்பான தனித்தனி சம்பவங்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
ஆகஸ்ட் 29 அதிகாலை உத்தரகாண்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை மற்றும் தொடர் மேக வெடிப்புகள் காரணமாக ஏற்பட்ட பேரழிவில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காணாமல் போயினர். இதனால் வீடுகள் சேதமடைந்து மக்கள் இடிபாடுகளுக்குள் புதைந்தனர்.
சாமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்கள் வெள்ளிக்கிழமை இயற்கை பேரழிவின் தாக்கத்தைச் சந்தித்தன. இந்த மழைக்காலங்களில் உத்தரகண்ட் இயற்கை பேரழிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.