
பெங்களுரூவில் காலணிக்குள் இருந்த பாம்பு கடித்து மென்பொறியாளர் ஒருவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்டுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பன்னேர்கட்டாவில் உள்ள ரங்கநாத லேஅவுட்டில் வசித்து வந்தவர் மென்பொறியாளர் மஞ்சு பிரகாஷ்(41). இவர் தனது காலணிக்குள் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்து வெள்ளிக்கிழமை பலியானார். ஆனால் பாம்பு கடித்தது கூட அறியாமல் காலணியோடு அரை மணி நேரம் நடந்ததால், பாம்பும் காலணிக்குள்ளேயே உயிரிழந்தது.
இதுகுறித்து மஞ்சுவின் தம்பி ஹரிஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ளிக்கிழமை மதியம் 12.45 மணியளவில், தனது சகோதரர் கரும்புச் சாறு வாங்க காலணியை அணிந்துகொண்டு வெளியே சென்று சில நிமிடங்கள் கழித்து திரும்பி வந்தார். பின்னர் அவர் தூங்கச் சென்றார்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து தொழிலாளி ஒருவர், காலணிக்குள் குட்டி பாம்பைக் கவனித்து குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார். பிறகு என் தந்தை பரிசோதித்தபோது பாம்பு இறந்து கிடந்தது தெரியவந்தது. என் சகோதரர் காலணியை முன்பே அணிந்திருந்தார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
அவரது அறையில் சோதனை செய்தபோது, அவர் மயக்கமடைந்து வாயிலிருந்து நுரை வந்ததைக் கண்டோம். அவரது மூக்கிலும் ரத்தம் இருந்தது. நாங்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம், ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்," என்று அவர் கூறினார்.
பாம்பு கடித்ததில் மஞ்சுவுக்கு எந்த உணர்வும் தென்படவில்லை என்ன என கேட்டதற்கு ஹரிஷ் கூறுகையில், தனது சகோதரருக்கு 2016 ஆம் ஆண்டு பேருந்து விபத்துக்குப் பிறகு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதனால் அவரது காலில் உணர்வு இல்லாமல் போனதாகவும் பதிலளித்தார்.
பன்னர்கட்டா போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்கைப் பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.