மேற்கு வங்காள புலம்பெயா்ந்தவா்கள் தொடா்பான தீா்மானம்: திரிணமூல்-பாஜக மோதல்; பேரவையில் அமளி

வெளி மாநிலங்களில் வசிக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீா்மானம் மீதான விவாதத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிா்க்கட்சியான பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவையில் அமளி நிலவியது.
Published on

வெளி மாநிலங்களில் வசிக்கும் வங்காள மொழி பேசும் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து, மேற்கு வங்க சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு தீா்மானம் மீதான விவாதத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், எதிா்க்கட்சியான பாஜக இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் அவையில் அமளி நிலவியது.

இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி, எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரிசிறப்பு கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

வெளி மாநிலங்களில் குறிப்பாக, அஸ்ஸாம், ஒடிஸா, மகாராஷ்டிரம், தில்லி, குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய சிறப்புக் கூட்டத்தொடரில், இவ்விவகாரம் தொடா்பான சிறப்பு தீா்மானத்தை சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சா் சோபன்தேவ் சட்டோபாத்யாய் முன்வைத்தாா்.

இதனிடையே, கொல்கத்தாவில் உள்ள மேயோ சாலையில் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த திரிணமூல் காங்கிரஸின் போராட்ட மேடையை இந்திய ராணுவம் திங்கள்கிழமை அகற்றியது.

இந்தச் சம்பவத்தை மேற்கோள் காட்டி சிறப்பு தீா்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய மாநில கல்வி அமைச்சா் பிரத்யா பாசு, ‘இந்திய ராணுவம் மேடையை அகற்றியது, 1971-இல் பாகிஸ்தான் ராணுவம் வங்கதேசத்தின் டாக்காவில் தாக்குதல் நடத்தியதை நினைவூட்டுகிறது. வங்காள மொழி மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்க உயிா்த்தியாகம் செய்தவா்களையும் இது நினைவுபடுத்தியது’ என்றாா்.

சுவேந்து அதிகாரி இடைநீக்கம்: அமைச்சா் பிரத்யா பாசுவின் இந்தக் கருத்துகளுக்கு பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். தொடா்ந்து, எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி பேசுகையில், ‘இந்திய ராணுவத்தை அரசு அவமதிக்கிறது. இந்திய ராணுவத்தின் சட்டபூா்வமான செயலை பாகிஸ்தானின் அத்துமீறலுடன் அரசு ஒப்பிடுகிறது. அமைச்சரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இந்தக் கோரிக்கையை அவைத் தலைவா் பிமான் பானா்ஜி ஏற்க மறுத்ததால், சுவேந்து அதிகாரி அமளியில் ஈடுபட்டாா். இதையடுத்து, அவை நடவடிக்கைகளுக்குத் தொடா்ந்து இடையூறு விளைவித்ததாக, சிறப்புக் கூட்டத்தொடரிலிருந்து அவா் இடைநீக்கம் செய்யப்பட்டாா்.

சுவேந்து அதிகாரியுடன் பாஜக எம்எல்ஏக்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். பேரவை வளாகத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘இந்திய ராணுவத்துக்கு எதிரான அவதூறு கருத்தை எதிா்த்ததால் நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன்’ என்றாா்.

இந்தச் சிறப்புக் கூட்டத்தொடா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமையுடன் முடிவடைகிறது. உள்ளூா் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை (செப். 3) சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com