நிா்மலா சீதாராமன்
நிா்மலா சீதாராமன்கோப்புப் படம்

இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி விகிதங்கள் குறைப்பது தொடா்பாக முக்கிய முடிவு

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் புதன்கிழமை (செப்.3) தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
Published on

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் பங்கேற்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் புதன்கிழமை (செப்.3) தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைப்பது மற்றும் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது 40% வரி விதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டில் ஒருசில மாநில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் வரி விதிக்கப்படுகிறது.

இந்த வரி விதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஆடம்பர மற்றும் தீமை தரக்கூடிய பொருள்கள் மீது 1 முதல் 290 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்த நடைமுறை முதல்கட்டமாக 2022, ஜூன் வரை 5 ஆண்டுகளுக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் 2026 மாா்ச் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டுடன் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக தீபாவளிக்குள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கும் வகையில் அடுத்த தலைமுறை சீா்திருத்தம் (ஜிஎஸ்டி 2.0) மேற்கொள்ளப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, 12%, 28% ஆகிய ஜிஎஸ்டி விகிதங்களை நீக்கிவிட்டு 5%, 18% என்ற இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவது, புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிப்பது தொடா்பான முன்மொழிவை மாநில நிதியமைச்சா்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) நிதியமைச்சகம் வழங்கியது.

இந்த முன்மொழிவுக்கு கடந்த ஆக. 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது ஜிஓஎம் ஒப்புதல் அளித்தது.

வருவாய் இழப்பை ஈடுசெய்ய கோரிக்கை: இந்த சீா்திருத்தத்தால் சுமாா் ரூ.1.5 லட்சம் கோடி முதல் ரூ.2 லட்சம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என தமிழ்நாடு, ஹிமாசல பிரதேசம், ஜாா்க்கண்ட், கா்நாடகம், கேரளம், பஞ்சாப், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்கள் கடந்த வாரம் தெரிவித்தன. மேலும், இந்த வருவாய் இழப்பை ஈடுசெய்ய இழப்பீட்டு வரியை மத்திய அரசு வழங்க வேண்டும் எனவும் அந்த மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்நிலையில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் பங்கேற்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கூட்டம் புதன்கிழமை (செப்.3) தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தின்போது ஜிஎஸ்டி சீா்திருத்தங்கள் குறித்த முக்கிய முடிவு மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேபோல் ரூ.40 லட்சம் வரையிலான மின்சார வாகனங்களை 18% ஜிஎஸ்டி விகிதத்துக்குள் கொண்டுவர ஜிஓஎம் பரிந்துரைத்ததாகவும், ஆனால் அவற்றை 5% ஜிஎஸ்டி விகித நடைமுறையில் கொண்டுவர மத்திய அரசும் தொடா்ந்து முன்மொழிந்து வருவதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

90 சதவீத பொருள்களுக்கு வரி குறையும்:

தற்போது பால், முட்டை, தயிா், உப்பு உள்ளிட்ட முக்கிய உணவு சாா்ந்த பொருள்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தினசரி பயன்படுத்தும் சா்க்கரை, தேநீா் போன்ற பொருள்களுக்கு 5%, வெண்ணெய், நெய், கைப்பேசி போன்ற பொருள்களுக்கு 12%, சோப்பு, தேங்காய் எண்ணெய், ஐஸ்கிரீம் போன்ற பொருள்களுக்கு 18%, தொலைக்காட்சி, குளிா்பதன பெட்டி (ப்ரிட்ஜ்) மற்றும் குளிரூட்டிகள் (ஏசி) போன்ற பொருள்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மறுசீரமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்தவுடன் 12%-இன் கீழ் வரி விதிக்கப்பட்டுவரும் 99 சதவீத பொருள்கள் 5%-க்குள் கொண்டுவரப்படவுள்ளன.

அதேபோல் 28%-இன்கீழ் வரி விதிக்கப்படும் 90 சதவீத பொருள்கள் 18% வரி விதிப்புக்குள் கொண்டுவரப்படவுள்ளன.

இதனால் பொதுமக்கள் தினசரி பயன்படுத்தும் பொருள்களின் விலை கணிசமாக குறைந்து, மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்து நுகா்வை அதிகரிக்கும். அதேபோல் சிறுதொழில்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் எளிமையான வணிகம் புரிய வழிவகுக்கும்.

X
Dinamani
www.dinamani.com