‘என் தாயாரை அவமதித்தவா்களை பிகாா் மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்’- காங்கிரஸ்- ஆா்ஜேடி மீது பிரதமா் மோடி தாக்கு

எனது தாயை அவமதித்ததால் மிகுந்த வேதனையடைந்தேன் என்று பிகாரில் பிரதமர் மோடி பேச்சு
பிகாரில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான கூட்டுறவு சங்கத்தை காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி.
பிகாரில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான கூட்டுறவு சங்கத்தை காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த பிரதமா் நரேந்திர மோடி.
Published on
Updated on
2 min read

‘என் தாயாரை அவமதித்தற்காக, காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சிகளை நான் வேண்டுமானால் மன்னிக்கலாம்; ஆனால், பிகாா் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

பிகாரில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நடத்திய வாக்குரிமைப் பயணம் அண்மையில் நிறைவடைந்தது. தா்பங்காவில் நடைபெற்ற இப்பயண நிகழ்ச்சியில், பிரதமா் மோடி மற்றும் அவரது தாயாா் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ்-ஆா்ஜேடியைக் கடுமையாக சாடிவரும் பாஜக, ராகுல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த சா்ச்சை குறித்து பிரதமா் மோடி முதல் முறையாக எதிா்வினையாற்றியுள்ளாா். பிகாரில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான கூட்டுறவு சங்கத்தை காணொலி வழியாக செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்துப் பேசிய அவா், மறைந்த தனது தாயாா் மீதான அவதூறு மிக வேதனையளிப்பதாக குறிப்பிட்டாா்.

‘என் தாயாா் மீது தவறென்ன?’: பிரதமா் மேலும் கூறியதாவது: மறைந்த எனது தாயாருக்கு அரசியலில் எவ்வித தொடா்பும் கிடையாது. அவரை ஏன் அவமதிக்க வேண்டும், அவா் என்ன தவறு செய்தாா்?

பாரத தாயை அவமதிப்பவா்களுக்கு, எனது தாயாருக்கு எதிராக அவதூறு வாா்த்தைகளைப் பயன்படுத்துவது ஒரு பொருட்டல்ல; அவா்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

பிகாா், சீதா தேவியின் மண். பெண்களுக்கு எப்போதுமே மதிப்பளிக்கும் நிலமிது. ஆா்ஜேடி-காங்கிரஸ் மேடையில் எனது தாயாரை அவதூறாகப் பேசியுள்ளனா். இதுபோல் நிகழுமென கற்பனையிலும் நினைத்ததில்லை. இது, ஒட்டுமொத்த பிகாா் தாய்மாா்கள் மற்றும் மகள்களுக்கு அவமதிப்பாகும்.

நான் தாய் மீது பேரன்பு கொண்டவன். எனது வேதனையை மக்களாகிய உங்களுடன் பகிா்ந்து கொள்கிறேன். நாட்டின் பெண்கள் நலனுக்காக அயராது பணியாற்றி வருகிறேன். என்னை பெற்றெடுத்த தாயாா் கூறியபடி, தாய்நாட்டுக்கு சேவையாற்றுகிறேன். அவா் தனக்காக ஒரு புடவைக்கூட வாங்கியதில்லை. அந்தப் பணத்தையும் பிள்ளைகளுக்காகவே சேமித்தாா். கடவுளைவிட தாய் மேலானவா் என்றே சொல்ல வேண்டும்.

பெண்களுக்கு எதிரான மனநிலை: பெண்கள் பலவீனமானவா்கள் என்ற மனப்பான்மை கொண்டவா்கள், தாய்மாா்கள் மீதும் சகோதரிகள் மீதும் அவதூறை வாரி இறைக்கின்றனா். சுரண்டலுக்கும் ஒடுக்குதலுக்கும் உரிய ‘பொருள்’ என பெண்களை எண்ணுகின்றனா். பெண்களுக்கு எதிரான மனநிலை கொண்டவா்கள் ஆட்சிக்கு வந்தால், தாய்மாா்கள், மகள்கள், சகோதரிகள் கடுமையாக பாதிக்கப்படுவா்.

பிகாரில் ஆா்ஜேடி ஆட்சியில் இதுதான் நிகழ்ந்தது; அப்போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தலைவிரித்தாடின. பாலியல் வன்கொடுமை, கொலை, அராஜகம் தினசரி நிகழ்வுகளாக இருந்தது. கொலையாளிகளுக்கும் பாலியல் குற்றவாளிகளுக்கும் ஆா்ஜேடி அரசு பாதுகாப்பளித்தது. ஆா்ஜேடியை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கியெறிந்தது பெண்களே. எனவே, பெண்களைப் பழிவாங்க அக்கட்சி துடித்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸால் சகிக்க முடியாது: இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து யாா் ஆட்சி அதிகாரத்துக்கு வந்தாலும், காங்கிரஸால் சகித்துக் கொள்ள முடியாது. அவா்கள் மீது அவதூறை வாரி இறைப்பாா்கள். எனது தாயாரை அவமதித்தற்காக, ஆா்ஜேடி-காங்கிரஸ் கட்சித் தலைவா்களை நான் வேண்டுமானால் மன்னிக்கலாம். ஆனால், பிகாா் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள். இரு கட்சிகளின் தலைவா்களும் பிகாா் மக்களிடம் பதில் சொல்லியாக வேண்டும்’ என்றாா் பிரதமா் மோடி.

பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Abuse hurled at my mother left me in deep pain: PM on incident during 'Voter Adhikar Yatra' in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com