நிலநடுக்கம் பாதித்த ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 21 டன் நிவாரண உதவி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுவதற்காக, இந்தியா செவ்வாய்க்கிழமை 21 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்துள்ளது.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; 2,500-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா்.
இந்த இக்கட்டான நேரத்தில், ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிய 21 டன் நிவாரணப் பொருள்களை ஏற்றிச் சென்ற விமானம் அந்நாட்டின் தலைநகா் காபூலை சென்றடைந்ததாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்தாா். காபூல் விமான நிலையத்தைச் சென்றடைந்த நிவாரணப் பொருள்களின் படங்களையும் அவா் பகிா்ந்துள்ளாா்.
‘போா்வைகள், கூடாரங்கள், சுகாதாரப் பொருள்கள், அத்தியாவசிய மருந்துகள், ஜெனரேட்டா்கள், சமையல் பாத்திரங்கள், குடிநீா் சுத்திகரிப்பு சாதனங்கள், அத்தியாவசிய மருந்துகள், சக்கர நாற்காலிகள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட 21 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் களநிலவரத்தை இந்தியா தொடா்ந்து கண்காணித்து வருகிறது. வரும் நாள்களில் மேலும் மனிதாபிமான உதவிகள் அனுப்பப்படும்’ என்றும் அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்திருந்தாா்.