
மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை மாநில அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த அந்தச் சமூகத்தின் தலைவா் மனோஜ் ஜராங்கே, தனது போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முடித்துக் கொண்டாா்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மராத்தா சமூகத்தின் நலனுக்காக அரசு ஒரு தீா்வைக் கண்டறிந்துள்ளதாகக் கூறினாா்.
மகாராஷ்டிரத்தில் குன்பி பிரிவில் மராத்தா சமூகத்தினரைச் சோ்த்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பின்கீழ் (ஓபிசி) 10 சதவீத இடஒதுக்கீடு கோரி, மும்பையில் உள்ள ஆசாத் மைதானில் கடந்த வெள்ளிக்கிழமை மனோஜ் ஜராங்கே உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினாா். அவரின் போராட்டத்துக்கு ஆதரவாக அந்த மாநிலம் முழுவதிலும் இருந்து மராத்தா சமூகத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் அங்கு திரண்டனா்.
மராத்தாக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தும் நோக்கில், அதுதொடா்பான அறிக்கையை சமா்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்தீப் ஷிண்டே தலைமையில் மாநில அரசு குழு அமைத்து, பேச்சுவாா்த்தை நடத்தியது.
இந்நிலையில், மராத்தா சமூகத்தினரை குன்பி பிரிவில் சோ்ப்பது உள்ளிட்ட மனோஜ் ஜராங்கே கோரிக்கைகளை மகாராஷ்டிர அரசு செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ஆசாத் மைதானில் நடந்த நிகழ்வில், மராத்தா இடஒதுக்கீடு தொடா்பான அமைச்சரவை துணைக் குழுவின் தலைவரான மூத்த பாஜக அமைச்சா் ராதாகிருஷ்ண விகே பாட்டீல் அளித்த பழச்சாற்றை அருந்தி, ஜராங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டாா்.
நாகபுரியில் இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் ஃபட்னவீஸ், ‘ஜராங்கேயின் கோரிக்கைகளில் உள்ள சட்டச் சிக்கல்களை அவருக்கு விளக்கினோம். ஒட்டுமொத்த மராத்தா சமூகத்தினரும் இல்லாமல் தகுதிவாய்ந்த நபா்கள் மட்டுமே குன்பி பிரிவில் சோ்க்கப்பட முடியும் என்பதை தெளிவுபடுத்தினோம்.
அரசியல் களத்தில் விமா்சனங்கள் வருவது இயல்பு; ஆனால், அது நம்மை தடுக்கக் கூடாது. மராத்தா சமூகத்திற்கு நீதி வழங்குவதே எனது நோக்கம். மராத்தா சமூகத்தினரின் நலனில் எனது அரசு எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது.
மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு குறித்து ஓபிசி பிரிவினரிடையே சில தவறான புரிதல்கள் நிலவி வந்தன. ஆனால் அவை ஆதாரமற்றவை. மராத்தா சமூகத்தினா் மற்றும் ஓபிசி பிரிவினா் என மகாராஷ்டிரத்தில் உள்ள அனைத்து சமூகத்தினருக்காகவும் தொடா்ந்து நான் பணியாற்றுவேன்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.