
ஜம்மு - காஷ்மீரில் மழைக்காலத்தில் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அங்கிருந்து பழங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதில் தாமதமும் அதனால் மேற்கண்ட உணவுப் பொருள்கள் கெட்டு வீணாவதும் தொடர்கதையாகி வருகிறது.
கனமழையால் காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகர் - ஜம்மு தேசிய நெடுஞ்சாலை ஒரு வாரமாக மூடப்பட்டுள்ளதால், காஷ்மீர் பழ வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். கோடிக்கணக்கான ஆப்பிள் மற்றும் பேரிக்காய்களை ஏற்றிச்சென்ற 1,000-க்கும் மேற்பட்ட லாரிகள் சிக்கித்தவிக்கின்றன.
இதனையடுத்து, இந்தப் பிரச்சினைக்கான சிறந்ததொரு தீர்வாக ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவை தேவை என்று ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று(செப். 2) தெரிவித்திருப்பதாவது: “ஜம்மு - காஷ்மீரில் நெடுஞ்சாலைகளில் ஏராளமான பழங்கள் ஏற்றிச் செல்லும் லாரிகள், வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதாலும், பழ மண்டிகளிலும் பதப்படுத்துமிடங்களிலும் இடப்பற்றாக்குறை காரணமாகவும் பழங்கள் விளைவிக்கும் விவசாயிகள் பெரும் பிரச்சைனையை எதிர்கொள்கிறார்கள்.
இத்தகைய சூழலில், ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு சரக்கு ரயில் சேவை தேவைப்படுகிறது. இதனால், ஜம்முவிலிருந்து தில்லிக்கு பழங்கள் எடுத்துச் செல்வது பாதிக்கப்படாது. இது காலத்தின் கட்டாயமாகும். பழ விவசாயிகளுக்கு ரயில் சேவை மிகுந்த பயனளிக்கும்.
ஆகவே, ரயில்வே அமைச்சர் சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை வைக்கிறேன். இதன்மூலம், நாடெங்கிலும் உள்ள மண்டிகளுக்கு இங்கு விளைவிக்கப்படும் பழங்கள் விரைந்து எடுத்துச் செல்லப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.