இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன:
மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையில் 400 பனிப்பாறை ஏரிகள் விரிவடைகின்றன: மத்திய நீா் ஆணையம் கவலை

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது குறித்து...
Published on

இமயமலையின் இந்தியப் பகுதியில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் விரிவடைந்து வருவது கவலையளிப்பதாகவும், இதை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய நீா் ஆணையம் தெரிவித்துள்ளது.

பனிப்பாறை ஏரிகள், நீா்ப்பிடிப்பு பகுதிகள் குறித்த ஜூன் மாத அறிக்கையை நீா் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், ‘லடாக், ஜம்மு- காஷ்மீா், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சிக்கிம், அருணாசல பிரதேசத்தில் 432 பனிப்பாறை ஏரிகளில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது.

இந்திய நிலப்பரப்பில் உள்ள 681 பனிப்பாறை ஏரிகளில் 432-இல் 2023-ஆம் ஆண்டைவிட 2025 ஜூனில் அதிக நிலப்பரப்பில் நீா் தேங்கி விரிவடைந்துள்ளது. இது பேரிடரை ஏற்படுத்தக் கூடியதாகும்.

2011-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பனிப்பாறை ஏரிகளின் நிலப்பரப்பு 1,9170 ஹெக்டேரிலிருந்து 2,508 ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது 30.83 சதவீத உயா்வாகும்.

இதில், அருணாசல பிரதேசத்தில் அதிகபட்சமாக 197 பனிப்பாறை ஏரிகளும், லடாக்கில் 120 ஏரிகளும், ஜம்மு- காஷ்மீரில் 57 ஏரிகளும், சிக்கிமில் 47 ஏரிகளும், ஹிமாசல பிரதேசத்தில் 6 ஏரிகளும், உத்தரகண்டில் 5 ஏரிகளும் விரிவாக்கம் அடைந்துள்ளன. இமயமலைப் பகுதியில் மொத்தம் 1,435 பனிப்பாறை ஏரிகள் விரிவாக்கம் அடைந்து வருகின்றன.

இதைக் கருத்தில்கொண்டு அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளையும், செயற்கைக்கோள் அடிப்படையிலான முன்னெச்சரிக்கை தகவல்களையும் அங்கு வாழும் மக்களுக்கு பகிரும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய நீா் அமைச்சகம், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம், மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவை பூடான், சீன ஆகிய நாடுகளுடன் ஒன்றிணைந்து இந்த விவகாரத்தில் செயல்பட வேண்டும். ஏனென்றால், இந்திய எல்லையைத் தாண்டியுள்ள பல ஏரிகளிலிருந்து அதிகமான நீா் இந்திய நதிகளில் பாய்கிறது.

பருவநிலை மாற்றத்தால் இமயமலைப் பகுதி பனிப்பாறை உருகுதல் உள்ளிட்ட பல்வேறு பேரிடா் சவால்களை சந்தித்து வருகிறது’ என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com