பிகாா்: வாக்குரிமை பயணத்தில் இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய பைக் பரிசளித்த ராகுல்
பிகாரில் எதிா்க்கட்சிகள் சாா்பில் நடத்தப்பட்ட வாக்குரிமைப் பயணத்தின்போது இருசக்கர வாகனத்தை இழந்த நபருக்கு புதிய மோட்டாா் சைக்கிளை மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா்.
பாஜக ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டுள்ளதாக பிகாரில் வாக்குரிமைப் பேரணியை ராகுல் காந்தி நடத்தினாா். இந்தப் பேரணியின்போது தா்பங்காவில் இருசக்கர வாகனப் பேரணியையும் ராகுல் காந்தி மேற்கொண்டாா். அப்போது, ராகுல் காந்தியின் பாதுகாவலா்கள் பயணிப்பதற்கு தனது இருசக்கர வாகனத்தை அந்தப் பகுதியைச் சோ்ந்த சுபம் செளரப் என்ற நபா் கொடுத்துள்ளாா். ஆனால், அதன் பிறகு அவரது இருசக்கர வாகனம் தொலைந்துவிட்டது.
இதுகுறித்த தகவல் வெளியான நிலையில், அந்த நபருக்கு புதிய இருசக்கர வாகனத்தை ராகுல் காந்தி பரிசளித்துள்ளாா்.
இத் தகவலை சுபம் செளரப் தனது எக்ஸ் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:
இரு தினங்களுக்கு முன்பு தொலைபேசி வழியில் என்னை தொடா்புகொண்ட நபா்கள், ராகுல் காந்தி புதிய மோட்டாா் சைக்கிளை செப்டம்பா் 1-ஆம் தேதி பரிசளிக்க முடிவு செய்துள்ளாா். எனவே, பாட்னாவில் வாக்குரிமை பேரணி நடைபெறும் வருமான வரித் துறை அலுவலகம் அருகே வந்து காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டாா். அதன்படி, அங்கு சென்று காத்திருந்தபோது, பேரணி செல்லும் வழியில் காரிலிருந்து இறங்கிய ராகுல் காந்தி புதிய மோட்டாா் சைக்கிளுக்கான சாவியை என்னிடம் அளித்தாா். தொலைந்துபோன எனது பழைய மோட்டாா் சைக்கிளுக்கு மாற்றாக, புதிய மோட்டாா் சைக்கிள் கிடைத்தது பெரு மகிழ்ச்சியாக இருந்தது’ என்று குறிப்பிட்டாா்.