
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்குப் பிறகு ஏசி விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் உள்ள நான்கு வகையான ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படவிருக்கிறது.
அதாவது, 12%, 28% ஆகிய ஜிஎஸ்டி விகிதங்களை நீக்கிவிட்டு 5%, 18% என்ற இரு விகிதங்களை மட்டும் நடைமுறைப்படுத்த முடிவெடுத்து அறிவிக்கப்படவிருப்பதால், தற்போது 28 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருக்கும் ஏசிகளுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியாக குறையும். இதனால், அதன் விலைகள் ரூ.1500 முதல் ரூ.2500 வரை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், பண்டிகைக் காலங்கள் தொடங்க இருக்கும் நிலையில், ஏற்கனவே விற்பனையை தீவிரமாக்க திட்டமிட்டு வரும் வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள், இந்த ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்பு நடவடிக்கைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன.
எப்போது ஜிஎஸ்டி குறைப்பு குறித்த அறிவிப்பு வந்ததோ, அப்போதே பலரும் புதிய பொருள்கள் வாங்குவதை தள்ளிப்போட்டுள்ளனர். செப்டம்பர் மாதம் இது குறித்த அறிவிப்பு வெளியாகி, 10 சதவீதம் அளவுக்கு வரி விகிதம் குறையும்போது வாங்கலாம் எனக் காத்திருக்கிறார்கள்.
அதுபோல, 32 இன்ச் அளவு வரை உள்ள தொலைக்காட்சிகளுக்கும் தற்போது இருக்கும் 28 சதவீத ஜிஎஸ்டி இனி 18 சதவீதமாகக் குறையும் என்பதால், தொலைக்காட்சி விலைகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாஷிங்மிஷின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.