
நமது நிருபர்
மாநில சட்டப்பேரவையில் இயற்றப்படும் மசோதாக்கள் மீது அதிருப்தி எழுந்தால், அவற்றின் மீதான முடிவை அறிவிக்காமல் இருக்க ஆளுநருக்கு உரிமை இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் குடியரசுத் தலைவரும், ஆளுநரும் முடிவெடுக்க உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு காலக்கெடு நிர்ணயித்து கடந்த ஏப்ரல் 8}ஆம் தேதி தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பில் தெளிவுரை கோரி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி ஆகஸ்ட் 19}ஆம் தேதி குறிப்பு அனுப்பியிருந்தார். அதை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஏழாம் நாளாக புதன்கிழமை விசாரணை நடத்தியது.
அப்போது, மேற்கு வங்க அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கபில் சிபல், "சுதந்திரத்துக்குப் பின்னர் குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவை நிறுத்திவைத்ததாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மாநில அரசு அனுப்பும் மசோதா மீது ஆய்வு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு செய்வது மாநில அரசின் அதிகாரத்தில் குறுக்கிடுவதாகும். மசோதாக்கள் மீது ஆட்சேபம் இருந்தால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடிமக்கள் வேண்டுமானால் நீதித் துறையை நாடலாம். ஆனால், ஆளுநர் அதன் மீதான முடிவை அறிவிக்காமல் ஒதுக்கிவைக்க முடியாது' என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "சில மசோதாக்கள் ஆட்சேபகரமானதாக இருந்தால் ஆளுநர் அப்போது தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாதா? மத்திய சட்டத்தின் பார்வையில் மாநில அரசின் மசோதா ஆட்சேபகரமானது எனக் கண்டறிந்தால், அதன் மீதான தனது முடிவை ஆளுநர் அறிவிக்காமல் ஒதுக்கிவைக்க முடியாதா?' எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு கபில் சிபல், "அரிய சந்தர்ப்பங்களில்தான் அவ்வாறு செய்ய முடியும். இது இந்திய குடியரசின் வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு எடுத்துக்காட்டு' எனக் கூறினார்.
அப்போது, தலைமை நீதிபதி மீண்டும் குறுக்கிட்டு, "மசோதா மீது அதிருப்தி இருந்தால் அதை நிறுத்திவைக்க ஆளுநர் தனது உரிமையைப் பயன்படுத்த முடியாதா' எனக் கேள்வி எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து, கர்நாடக அரசுத் தரப்பில் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்ரமணியம் மற்றும் ஹிமாசல பிரதேசம் சார்பில் மூத்த வழக்குரைஞர் ஆனந்த் ஷர்மா ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர். அவற்றைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீதான அடுத்த விசாரணை செப்டம்பர் 9}ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.