
புது தில்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் புது தில்லியில் இன்று தொடங்கியது.
புது தில்லியில் உள்ள சுஷ்மா சுவாராஜ் பவனில் 56வது ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டமானது இன்று தொடங்கி இரு நாள்கள் நடைபெறுகிறது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் பங்கேற்றுள்ள இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி விகிதங்களை 5%, 18% என இரண்டாக குறைப்பது மற்றும் புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது 40% வரி விதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
ஏன் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது?
மாநிலங்கள் விதித்து வரும் ஒரு சில வரிகள் தவிர பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017, ஜூலை 1-ஆம் தேதி ஜிஎஸ்டி முறை மத்திய அரசார் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்கீழ் ஒவ்வொரு பொருளுக்கும் சேவைக்கும் என 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் வரி விதிக்கப்பட்டு வந்தது.
நிகழாண்டுடன் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, அதை மேலும் எளிமைப்படுத்தும் விதமாக தீபாவளிக்குள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை குறைக்கும் வகையில் அடுத்த தலைமுறை சீா்திருத்தம் (ஜிஎஸ்டி 2.0) மேற்கொள்ளப்படும் என சுதந்திர தின உரையில் பிரதமா் மோடி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில்தான், 12%, 28% ஆகிய ஜிஎஸ்டி விகிதங்களை நீக்கிவிட்டு 5%, 18% என்ற இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவது, புகையிலை, குட்கா மற்றும் பான் மசாலா போன்ற குறிப்பிட்ட சில பொருள்கள் மீது மட்டும் 40% வரி விதிப்பது தொடா்பாக மாநில நிதியமைச்சா்கள் குழுவுக்கு (ஜிஓஎம்) நிதியமைச்சகம் வழங்கியிருந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சா்கள் பங்கேற்கும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கூட்டம் இன்று தொடங்கியிருப்பது பல்வேறு முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.