உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கொள்கையை வகுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
Published on

இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவா்கள், ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுப்பதற்கான கொள்கையை வகுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்தியாவில் இணையவழி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் நைஜீரியாவை சோ்ந்த அலெக்ஸ் டேவிட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஜாா்க்கண்ட் அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அலெக்ஸ் டேவிட்டுக்கு அளித்த ஜாமீனை கடந்த ஆண்டு டிசம்பரில் ரத்து செய்தது. அதேவேளையில், ஜாமீன் பெற்ற அலெக்ஸ் நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றாா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, அகஸ்டின் ஜாா்ஜ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது.

எனினும் குற்றங்களில் ஈடுபடுவோரை நாடு கடத்த இந்தியா-நைஜீரியா இடையே இருதரப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாததால், அலெக்ஸ் டேவிட் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது சாத்தியமில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கருத்தில் கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை முடித்துவைத்தனா். அதேவேளையில், இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவா்கள், ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுப்பதற்கான கொள்கையை வகுப்பது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com