
ஜிஎஸ்டி வரி விகிதக் குறைப்பு மூலமாக மத்திய பாஜக அரசு, ராகுலின் அறிவுரையைப் பின்பற்றியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் தலைமையில் தில்லியில் புதன்கிழமை(செப். 3) நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டியை எளிமைப்படுத்தும் வகையில் நான்கு விகித ஜிஎஸ்டி-யில் 12%, 28% ஆகிய விகிதங்களை நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இரு விகித நடைமுறையைப் பின்பற்றுவதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் பால் பொருள்கள், குழந்தைகளுக்கான பொருள்கள், மின்னணு சாதனங்கள், வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாகக் குறைய வாய்ப்புள்ளது. வருகிற செப். 22 முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளது.
ஜிஎஸ்டி வரி விகிதம் குறைப்புக்கு வரவேற்பு ஒருபுறம் இருந்தாலும் இதனைச் செய்வதற்கு ஏன் இத்தனை ஆண்டு காலம்? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
அதிகபட்சமாக ஜிஎஸ்டி வரி விகிதம் 18% சதவீதமாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2016 ஆம் ஆண்டே கூறியுள்ளார். ராகுல் காந்தியின் இந்த எக்ஸ் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராகுல் கடந்த 2016ல் எக்ஸ் பக்கத்தில், "நாட்டில் அனைத்து மக்களின் நலனுக்கும் ஜிஎஸ்டி வரியின் அதிகபட்சம் 18% ஆக இருக்கும். ஜிஎஸ்டி, பணக்காரர்களுக்கு மட்டுமானதாக மட்டுமின்றி ஏழை, சாதாரண மக்களுக்குமானதாக இருக்க வேண்டும். அதனால் ஜிஎஸ்டி 18% மற்றும் அதற்கு குறைவானதாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன் கெரா, ராகுலின் பதிவைப் பகிர்ந்து, "இறுதியாக அவர்கள்(பாஜக) ராகுலின் அறிவுரையைப் பின்பற்றும் நிலையில் அதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார்கள்?' என கேள்வி எழுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.