
மே 9 கலவர வழக்குத் தொடர்பாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் மற்றொரு மருமகன் ஷெர்ஷா கானுக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது ஊழல், பணமோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ந்தேதி போலீஸார் அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் இம்ரான்கானின் மருமகன்கள் ஷாஹ்ரேஸ் மற்றும் ஷெர்ஷா கானை லாகூர் போலீசார் கைது செய்தனர்.
ஒருநாள் முன்னதாக ஷெர்ஷா கானின் சகோதரர் ஷாஹ்ரேஸ் கானுக்கு லாகூரில் உள்ள பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து இன்று ஷெர்ஷாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
ஷெர்ஷா மற்றும் ஷாஹ்ரேஸ் இருவரும் இம்ரான் கானின் சகோதரி அலீமா கானின் மகன்கள் ஆவர்.
ஆகஸ்ட் 21 அன்று லாகூர் போலீஸார் இரு சகோதரர்களையும் கைது செய்தனர், இது "போலி வழக்கு" என்றும், கடந்த வார இறுதியில் அவர்களின் போலீஸ் காவல் முடிவடைந்த பின்னரும் இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனர் என்று அலீமா கூறினார்.
இந்த வழக்கு இன்று நடத்தப்பட்ட விசாரணையில், ஷெர்ஷாவின் வழக்குரைஞர், லாகூர் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில், தனது கட்சிக்காரருக்குஎதிரான வழக்குப் பதிவை அரசு தரப்பு இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்று வாதிட்டார்.
ஷெர்ஷாவுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்கும் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதால், சந்தேக நபரை வரம்பற்ற காலத்திற்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்று அவரது வழக்குரைஞர் வாதிட்டார். ஷெர்ஷா இம்ரான் கானின் மருமகன் என்பதால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார்.
வாதங்களைக் கேட்ட பிறகு, பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்ற நீதிபதி மன்சர் அலி கில், ஷெர்ஷாவை விடுவிக்க உத்தரவிட்டார், மேலும் 100,000 பவுண்டு ஜாமீன் பத்திரத்தைச் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இம்ரான்கானின் மருமகன்கள் கைது செய்யப்பட்டதற்கு சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியிருந்தன, இது ஒரு "அரசியல் வேட்டை" என்றும் அவர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.