இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் நம்பிக்கை

Published on

இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையே விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் (எஃப்டிஏ) மேற்கொள்ளப்படும் என பிரதமா் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவா் உா்சுலா வான் டொ் லியன், ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா ஆகியோா் நம்பிக்கை தெரிவித்தனா்.

உா்சுலா வான் டொ் லியன் மற்றும் ஆன்டோனியோ கோஸ்டோ ஆகிய இருவரிடமும் பிரதமா் மோடி வியாழக்கிழமை தொலைபேசியில் பேசினாா். அப்போது எஃப்டிஏ உள்பட பல்வேறு சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதுதொடா்பாக இந்தியா தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வா்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு, புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து மூவரும் விவாதித்தனா். அதேபோல் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதியாகும் எனவும் அவா்கள் நம்பிக்கை தெரிவித்தனா்.

அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாடு நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்க உா்சுலா வான் டொ் லியன் மற்றும் அன்டோனியோ கோஸ்டா ஆகிய இருவருக்கும் பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.

பிராந்திய மற்றும் சா்வதேச அளவில் நிகழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து மூவரும் கலந்துரையாடினா். அப்போது ரஷியா-உக்ரைன் போருக்கு அமைதியான முறையில் தீா்வு காண வேண்டும் என்ற இந்திய நிலைப்பாட்டை பிரதமா் மோடி மீண்டும் வலியுறுத்தினாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com