முக்கிய கனிமங்கள் மறுசுழற்சிக்கு ரூ.1,500 கோடி ஊக்குவிப்புத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாட்டில் முக்கிய கனிமங்கள் மறுசுழற்சி செய்யப்படுவதை ஊக்குவிக்க ரூ.1,500 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
புது தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தேசிய முக்கிய கனிமங்கள் திட்டப் பணியின் அங்கமாக இந்த ஊக்குவிப்புத் திட்டம் உள்ளது. நிகழ் நிதியாண்டு முதல் 2030-31-ஆம் நிதியாண்டு வரை, 6 ஆண்டுகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
மறுசுழற்சி திறனை ஆண்டுக்கு குறைந்தபட்சம் 270 கிலோ டன்னாக அதிகரித்து, அதன் விளைவாக ஆண்டுதோறும் 40 கிலோ டன் முக்கிய கனிம உற்பத்திக்கு இந்த ஊக்குவிப்புத் திட்டம் வழிவகுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது ரூ.8,000 கோடி முதலீட்டை ஈா்த்து, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமாா் 70,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மத்திய அமைச்சரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.