அனில் அம்பானி
அனில் அம்பானி

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’ மேலும் ஒரு வங்கி அறிவிப்பு

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் பரோடா வங்கி வகைப்படுத்தியுள்ளது.
Published on

தொழிலதிபா் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை ‘கடன் மோசடியாளா்’ என பாங்க் ஆஃப் பரோடா வங்கி வகைப்படுத்தியுள்ளது.

முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பாங்க் ஆஃப் இந்தியா இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பாங்க் ஆஃப் இந்தியா வங்கி அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனத்துக்கு ரூ.1,600 கோடி கடன் வழங்கியது. பின்னா் தவணை முறையில் மேலும் ரூ.862.50 கோடி கடன் வழங்கப்பட்டது. இக்கடன் முறையாகவும், முழுமையாகவும் திருப்பிச் செலுத்தப்படவில்லை.

இதையடுதது 2017 ஜூன் 5-ஆம் தேதி வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி நிலவரப்படி ரூ.1,656.07 கடன் தொகையை அனில் அம்பானியின் நிறுவனம் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது. இதனால் கடன் மோசடியாளராக வகைப்படுத்தப்படுவதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு வங்கி அளித்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை திவாலானதாக அறிவித்து, அதனை மற்றவா்களுக்கு கைமாற்றிவிடுவதன் மூலம் பணத்தை திருப்பி அளிக்க பெருநிறுவனங்கள் திவால் நடவடிக்கை மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனத்தைக் கையகப்படுத்த யாரும் முன்வரவில்லை.

கடந்த மாா்ச் மாத நிலவரப்படி தங்கள் நிறுவனத்துக்கு ரூ.40,400 கோடி கடன் இருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி ஒரு வங்கிக் கடன் ‘மோசடி’ என்று வகைப்படுத்தப்பட்டவுடன், வங்கிகள் அதை 21 நாள்களுக்குள் ரிசா்வ் வங்கி, சிபிஐ மற்றும் காவல்துறைக்குத் தெரிவிக்கும்.

முன்னதாக, கடந்த ஜூலை எஸ்பிஐ இதேபோன்ற நடவடிக்கை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் அனில் அம்பானி மற்றும் அவரின் நிறுவனத்தில் சிபிஐ சோதனையும் நடைபெற்றது. எஸ்பிஐ-க்கு ரூ.2,929.05 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ-யிடம் அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com