ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்
சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.
5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக குறைக்கப்பட்டன. இதனால் 12% வரி விதிக்கப்பட்ட பல பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைந்தது; மேலும் பல பொருள்கள் 28%-இல் இருந்து 18% விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 5% வரி விதிப்பு இருந்த பல பொருள்கள் முழுமையாக ஜிஎஸ்டி விலக்குப் பெற்றன.
இந்நிலையில், புது தில்லியில் வியாழக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சா் கோயல் இது தொடா்பாக கூறியதாவது:
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட முக்கியமான சீா்திருத்த நடவடிக்கையும் இதுவாகும். இதன் மூலம் கிடைக்கும் பலன்களை நுகா்வோருக்கு தொழில் நிறுவனங்கள் முழுமையாக அளிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி குறைப்பு மூலம் பெரும்பாலும் அனைத்துப் பொருள்கள்-சேவைகளின் விலை குறையும். இதனால் தேவை அதிகரிக்கும். இது உற்பத்தி அதிகரிப்பை ஊக்குவித்து நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வளா்க்கும். தொழில் நிறுவனங்கள் இந்தியத் தயாரிப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட கடந்த 11 ஆண்டுகளில் பல்வேறு சிறப்பான மாற்றங்களைக் கண்டுள்ளது. இப்போது இரு வரி விகிதங்கள் மட்டுமே இருப்பது மறைமுக வரி விதிப்பு முறையில் மிகப்பெரிய மாற்றமாகும். விவசாயம் தொடங்கி, சிறு, குறு தொழில்கள், மருந்து உற்பத்தி, மின்னணு சாதனங்கள், சுற்றுலா, காப்பீடு என அனைத்துத் துறைகளிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைவாா்கள்.
பிரதமா் நரேந்திர மோடி எப்போதும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவா். சுதந்திர தின உரையின்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு சீா்திருத்தம் தொடா்பாக அவா் பேசினாா். இப்போது அது நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பல பொருள்கள் ஜிஎஸ்டி-யில் இருந்து முழுமையாக விலக்குப் பெற்றுள்ளன. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கான பரிசு மக்களுக்கு கிடைத்துள்ளது. 140 கோடி மக்களின் சிறப்பான வாழ்க்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.