
பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிற முக்கிய கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார்.
இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 9.30 மணியளவில் அயோத்தி விமான நிலையத்தில் பிரதமர் டோப்கே வந்தடைந்தார். அயோத்தி மாவட்ட நிர்வாகத்தால் பிரதமர் டோப்கேவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் உத்தரப் பிரதேசஅமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி, அயோத்தி மேயர் கிரிஷ் பதி திரிபாதி, எம்எல்ஏ வேத் பிரகாஷ் குப்தா, மூத்த நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
விமான நிலையத்திலிருந்து, அவர் அலாகாபாத் -லக்னௌ-கோரக்பூர் நெடுஞ்சாலைகள் வழியாக அயோத்தி ராமர் கோயிலை அடைந்தார்.
அயோத்தி நகரம் முழுவதும் பிஏசி, சிஆர்பிஎஃப், எஸ்எஸ்எஃப், சிவில் போலீஸார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பிரதமர் அலுவலகம் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் அலுவலகம் அவரது வருகையை உன்னிப்பாகக் கண்காணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் டோப்கே ராம் லல்லா கோயில், அனுமன்கரி மற்றும் அயோத்தியில் உள்ள பிற முக்கிய கோயில்களை தரிசனம் செய்தார். அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பூட்டான் பிரதமர் அயோத்தியில் இருந்து தில்லிக்குச் செல்கிறார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, டோப்கேயை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருந்த அமைச்சர் சூர்ய பிரதாப் ஷாஹி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பூட்டான் பிரதமருக்கு பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவும் பூட்டானும் நீண்ட காலமாக மிகவும் நல்லுறவைப் பகிர்ந்து கொள்கின்றன.
இரு நாடுகளின் தலைவர்களும் அடிக்கடி ஒருவரையொருவர் சந்தித்து வருகிறார்கள், இதை ஒரு முக்கியமான வருகையாக நாங்கள் கருதுகிறோம் என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.