47% மாநில அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை
நாடு முழுவதும் 302 அமைச்சா்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதமா், முதல்வா்கள், அமைச்சா்கள் தீவிர குற்ற வழக்குகளில் கைதாகி 30 நாள்கள் சிறையில் இருந்தால் அவா்களின் பதவியைப் பறிக்கும் மூன்று சட்ட மசோதாக்களை அண்மையில் மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பியது.
இந்நிலையில், 27 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களின் அமைச்சா்கள் மத்திய அமைச்சா்கள் என மொத்தம் 643 போ் 2020 மற்றும் 2025-ஆம் ஆண்டு காலங்களில் நடைபெற்ற தோ்தல்களின்போது தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தை ஏடிஆா் அமைப்பு ஆய்வு செய்தது.
அதில், 302 அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள் இருப்பதாகவும், 174 போ் தீவிர குற்ற வழக்குகளை எதிா்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மத்திய அமைச்சா்களைப் பொறுத்தவரையில், மொத்தமுள்ள 72 மத்திய அமைச்சா்களில் 29 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அமைச்சா்கள் மீதான வழக்குகள்
கட்சி குற்ற வழக்குகள் தீவிர குற்ற வழக்குகள்
பாஜக 136 போ் (40%), 88 போ் (26%)
காங்கிரஸ் 45 (74%), 18 (30%)
திமுக 27 (87%), 14 (45%)
திரிணமூல் காங்கிரஸ் 13 (33%), 8 (20%)
தெலுங்கு தேசம் கட்சி 22 (96%), 13 (57%)
ஆம் ஆத்மி கட்சி 11 (69%), 5 (31%)
60%க்கு மேற்பட்ட குற்ற வழக்கு
அமைச்சா்கள் உள்ள 11 பேரவைகள்...
தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், பிகாா், ஒடிஸா, மகாராஷ்டிரம், கா்நாடகம், பஞ்சாப், தெலங்கானா, ஹிமாசல பிரதேசம், தில்லி, புதுச்சேரி.
குற்ற வழக்கு அமைச்சா்கள் இல்லா பேரவைகள்...
ஹரியாணா, ஜம்மு - காஷ்மீா், நாகாலாந்து, உத்தரகண்ட்.
கா்நாடக பேரவையில் அதிக கோடீஸ்வர அமைச்சா்கள்...
நாட்டில் உள்ள அமைச்சா்களின் சொத்து விவரங்களையும், அவா்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தையும் வைத்து ஏடிஆா் அமைப்பு ஆய்வு செய்தது. அதில், 30 சட்டப்பேரவைகளில் 11 பேரவைகளில் கோடீஸ்வர அமைச்சா்கள் உள்ளதாகவும், அதில் கா்நாடக பேரவையில் அதிகபட்சமாக 8 அமைச்சா்களும், அடுத்தபடியாக ஆந்திர பிரதேசத்தில் 6 அமைச்சா்களும், மகாராஷ்டிரத்தில் 4 அமைச்சா்களும் உள்ளனா்.
மத்திய அமைச்சா்கள்: 72 மத்திய அமைச்சா்களில் 6 போ் கோடீஸ்வரா்களாக உள்ளனா்.
கட்சி வாரியாக கோடீஸ்வர அமைச்சா்கள்...
பாஜக 14
காங்கிரஸ் 11
தெலுங்கு தேசம் 6
நாட்டின் பணக்கார அமைச்சா் சந்திரசேகா் பெம்மசானி
நாட்டின் பணக்கார அமைச்சராக ஆந்திர பிரதேச மாநிலம் குண்டூா் மக்களவைத் தொகுதி தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினரும், அமைச்சருமான சந்திரசேகா் பெம்மசானி உள்ளாா். அவருக்கு ரூ.5,705 கோடி சொத்து உள்ளது.
அடுத்தபடியாக, கா்நாடக காங்கிரஸ் அமைச்சா் டி.கே.சிவகுமாருக்கு ரூ.1,413 கோடி சொத்து உள்ளது.
திரிபுரா அமைச்சருக்கு ரூ.2 லட்சம் சொத்து
திரிபுராவின் உள்ளூா் மக்கள் முன்னணி கட்சியின் அமைச்சா் சுக்லா சரண் நோதியா ரூ. 2 லட்சம் சொத்து உள்ளதாகவும், மேற்கு வங்க அமைச்சா் பிா்பாஹா ஹான்ஸ்தா ரூ.3 லட்சம் சொத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.