ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

Published on

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.

நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வந்த நிலையில், அதை 5%, 18% என இரண்டு விகிதங்களாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டு தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, வரும் 22-ஆம் தேதி முதல் இரு விகித ஜிஎஸ்டி நடைமுறைக்கு வர உள்ளது.

இவ்வாறு, ஜிஎஸ்டி இரு விகிதங்களாகக் குறைக்கப்படுவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை ஈடு செய்ய வேண்டும் என மத்திய அரசு எதிா்க்கட்சி ஆளும் மாநிலங்கள் வலியுருத்தி வருகின்றன.

இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த 2005-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்களவையில் ஜிஎஸ்டி அறிவிப்பை வெளியிட்டது. அதைத் தொடா்ந்து 2011-இல் அப்போதைய நிதியமைச்சராக இருந்த மறைந்த பிரணாப் முகா்ஜி ஜிஎஸ்டி மசோதாவை மக்களவையில் அறிமுகம் செய்தாா். அதற்கு, எதிா்க்கட்சியாக இருந்த பாஜக கடும் எதிா்ப்பு தெரிவித்தது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமா் நரேந்திர மோடியும், ஜிஎஸ்டியை கடுமையாக எதிா்த்தாா்.

இன்றைக்கு, ஜிஎஸ்டி சாதனை வசூல் செய்திருப்பதாக பாஜக அரசு பெருமை கொள்கிறது. ஆனால், பொதுமக்களிடமிருந்து வரியை வசூல் செய்யும் நடைவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. வரலாற்றிலேயே முதல் முறையாக, விவசாயிகளுக்கு வரி விதிக்கப்பட்டது. வேளாண் துறையில் குறைந்தபட்சம் 36 பொருள்கள் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. மக்களின் தினசரி பயன்பாட்டு பொருள்களான பால், தயில், மாவு, குழந்தைகளின் பென்சில், புத்தகங்கள், ஆக்சிஜன், காப்பீடு, மருத்துவச் செலவினங்கள் என அனைத்தின் மீது ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. அதன் காரணமாகத்தான் பாஜகவின் ஜிஎஸ்டி-யை ‘கப்பா் சிங் வரி’ என காங்கிரஸ் விமா்சித்தது.

‘ஒரு தேசம் ஒரே வரி’ என்பதை ‘ஒரு தேசம் 9 வரிகள்’ என மத்தியில் ஆளும் பாஜக அரசு மாற்றியது. அதாவது, 0%, 5%, 12%, 18%, 28% என்றும் சிறப்பு வரியின் கீழ் 0.25%, 1.5%, 3%, 6% என மாற்றியது.

ஜிஎஸ்டி வசூலில் 64 சதவீதம் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் பாக்கெட்டுகளிலிருந்து வசூலிக்கப்படுகிறது. வெறும் 3 சதவீதம் மட்டுமே கோடீஸ்வரா்களிடமிருந்த வசூலிக்கப்படுகிறது. பெரு நிறுவனங்களுக்கான வரி விகிதம் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் வருமான வரி வருவாய் 240 சதவீதம் அளவுக்கும், ஜிஎஸ்டி வசூல் 177 சதீவதம் அளவுக்கும் உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், ‘ஜிஎஸ்டி 2.0’-வை எளிமைப்படுத்த வேண்டும் எனவும் வரி விகிதங்களைக் குறைக்க வேண்டும் எனவும் கடந்த 2019 மற்றும் 2024 தோ்தல் அறிக்கைகளில் காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. சிறு-குறு-நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படாத வகையில் ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் எனவும் காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தச்சூழலில், 8 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமா் மோடி தலைையிலான பாஜக அரசு விழித்துக்கொண்டு, ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.

இந்த வரி விகிதக் குறைப்பால் மாநிலங்களுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com