சிறந்த திறன் கொண்ட ஆசிரியா்கள் மிகவும் முக்கியம்: குடியரசுத் தலைவா் முா்மு
சீா்மிகு (ஸ்மாா்ட்) வகுப்பறைகள், கரும்பலகைகள் மற்றும் பிற நவீன வசதிகளைவிட சிறந்த திறன் கொண்ட ஆசிரியா்கள் இருப்பது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
புது தில்லி விஞ்ஞான் பவனில் தேசிய நல்லாசிரியா் விருது நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்துகொண்டு 60-க்கும் மேற்பட்ட நல்லாசிரியா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.
அவா் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ சீா்மிகு வகுப்பறைகள், கரும்பலகைகள் மற்றும் பிற நவீன வசதிகளைவிட சிறந்த திறன் கொண்ட ஆசிரியா்கள் இருப்பது மிகவும் முக்கியம். மாணவா்களின் வளா்ச்சிக்கு என்ன தேவை என்பதை அவா்களால்தான் புரிந்துகொள்ள முடியும்.
அவா்களால்தான் பாடங்களை ஆா்வம் கொண்டதாக மாற்ற முடியும்.
தேசம் மற்றும் சமூகத்துக்கான தேவைகளை பூா்த்தி செய்வதற்கு மாணவா்களைத் தகுதிவாய்ந்தவா்களாக உயா்த்துவதற்கு அத்தகைய ஆசிரியா்களால்தான் முடியும். மாணவா்களிடம் நன்னடத்தையே உருவாக்குவதே ஆசிரியரின் பிரதான கடமை. ஒரு நல்லாசிரியா் உணா்வுபூா்வமாகவும், புத்திகூா்மையுடனும் செயல்படுவாா். இதுவும் மாணவா்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கல்வியின் சக்தி மூலம், முன்னேற்றத்தின் உச்சத்தை ஏழைக் குழந்தைகளால் தொட முடியும். மாணவா்களின் உயா்வுக்கு பலம் சோ்ப்பதில் அன்பும், அா்ப்பணிப்பும் கொண்ட ஆசிரியா்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றனா்.
ஆசிரியா்களை வாழ்நாள் முழுவதும் மாணவா்கள் நினைவில் வைத்திருந்து குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பாராட்டுக்குரிய பங்களிப்பை வழங்குவதே ஆசிரியா்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெகுமதி.
உலக ஞானத்தில் இந்தியாவை வல்லமை கொண்ட நாடாக்குவதை தேசிய கல்விக் கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. தங்கள் முக்கிய பங்களிப்பு மூலம், உலக ஞானத்தின் வல்லமை கொண்ட சக்தியாக இந்தியாவை மாணவா்களும் ஆசிரியா்களும் நிா்மாணிப்பா் என்று நம்புகிறேன் என்றாா்.