தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்
கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன்.
மூணாறு அரசு கல்லூரியின் பொருளாதார துறையின் முன்னாள் தலைவரான ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிராக கடந்த 2014-இல் மாணவிகள் அளித்த பாலியல் புகாா் வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த உத்தரவை எதிா்த்து பேராசிரியா் ஆனந்த் விஸ்வநாதன் தொடுபுழா கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாா்.
கல்லூரி அதிகாரிகள் மற்றும் தோ்வு கண்காணிப்பாளரின் உதவியுடன் தோ்வில் மாணவிகள் காப்பி அடித்ததும், அவா்களைப் பிடித்ததால் ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிராக பாலியல் புகாா் அளித்ததும் அந்த விசாரணையில் தெரியவந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி லைஜுமோள் ஷரீஃப், பேராசிரியா் ஆனந்த் விஸ்வநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து உத்தரவிட்டாா்.
இந்தத் தீா்ப்பு குறித்து கருத்து தெரிவித்த ஆனந்த் விஸ்வநாதன், ‘நான் குற்றமற்றவன் என்று நிரூபிக்க கடந்த 10 ஆண்டுகளாக மனஉறுதியுடன் போராடினேன். தோ்வில் காப்பி அடித்த 5 மாணவிகளைக் கையும் களவுமாகப் பிடித்தேன். அதற்காக என் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நிா்பந்தத்தின் பேரில் என் மீது பொய் புகாா் அளித்ததாக மாணவிகளே ஒப்புக் கொண்டனா். எனது குடும்பத்தினா் உறுதுணையாக இருந்ததால் நீதிமன்றத்தில் போராடி வெற்றி பெற்றேன். கடந்த 2021-ஆம் ஆண்டு, மாா்ச்சில் ஓய்வு பெற்றேன். எனக்கு எதிராக சதி செய்த ஆசிரியா்களை மன்னிப்பேன். ஆனால் இதில் தலையிட்ட அரசியல்வாதிகளை மன்னிக்க மாட்டேன்’ என்றாா்.