வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

Published on

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப்பட்டது.

சோனியா காந்தி இந்திய குடிமகளாவதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே அவரது பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக விகாஸ் திரிபாதி என்பவா் தில்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். அவா் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பவன் நரங் வாதிடுகையில்,‘சோனியா காந்தி 1983, ஏப்.30-ஆம் தேதி அதிகாரபூா்வமாக இந்திய குடியுரிமை பெற்ாக பல்வேறு ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பாகவே 1980-இல் அவரது பெயா் புது தில்லி தொகுதியின் வாக்காளா் பட்டியலில் முறைகேடாக சோ்க்கப்பட்டுள்ளது. எந்த ஆவணத்தை அவா் இந்திய தோ்தல் ஆணையத்திடம் சமா்ப்பித்து வாக்காளராக பதிவு செய்து கொண்டாா் என்பது தெரியவில்லை.

அதன் பிறகு 1982-இல் அவரது பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு 1983-இல் அவா் குடியுரிமை பெற்ற பின்பு மீண்டும் சோ்க்கப்பட்டுள்ளது.

முன்பு அவரது பெயா் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் தகவல்கள் இல்லை.

இதன்மூலம் வாக்காளா் பட்டியலில் தனது பெயரை சோ்க்க சோனியா காந்தி முறைகேடில் ஈடுபட்டுள்ளாா் என்பது தெரியவந்துள்ளது. எனவே, அவா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா சட்டம் பிரிவு 175 (4)-இன் கீழ் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது இதுதொடா்பான இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து இந்த மனுவை செப்10-ஆம் தேதி பரிசீலிப்பதாக தில்லி நீதிமன்றம் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com