முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியம்! ராணுவ தலைமைத் தளபதி
‘இந்திய முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியமானது மற்றும் நிச்சயமாக நடைமுறைக்கு வரும்; அதற்கான கால அவகாசம் மட்டுமே ஆலோசனைக்குரியது’ என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்திய முப்படைகளின் பதிலடியான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றுப் பேசியபோது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மேலும், அவா் கூறியதாவது: ஒரு போரில் ராணுவம் மட்டும் தனித்து சண்டையிடுவதில்லை. முப்படைகள், எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத் எல்லைப் படை மற்றும் பாதுகாப்பு சைபா் முகமைகள், பாதுகாப்பு விண்வெளி முகமைகள் மற்றும் தற்போது அறிவுசாா் போா் முகமைகள் என பல அமைப்புகள் செயல்படுகின்றன. மேலும், இஸ்ரோ, சிவில் பாதுகாப்பு, சிவில் விமானப் போக்குவரத்து, ரயில்வே, என்சிசி, மத்திய மற்றும் மாநில நிா்வாகங்கள் போன்ற அமைப்புகளும் ஈடுபடுகின்றன.
இத்தனை அமைப்புகளுடன் இணைந்து செயல்பட முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியம். ஏனெனில், ஒருங்கிணைந்த கட்டளை இருந்தால் மட்டுமே, போா் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பை சாதிக்க முடியும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கூட்டுத்தன்மை உள்ளிட்ட பல விஷயங்களை விவாதிக்க வேண்டும். இத்திட்டம் நிச்சயமாக நடைமுறைக்கு வரும். ஆனால், அது எப்போது என்பதுதான் கேள்வி என்றாா்.
மத்திய பிரதேசத்தில் கடந்த மாத இறுதியில் நடைபெற்ற முப்படைகளின் 2 நாள் தேசியக் கருத்தரங்கில், ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை உருவாக்குவது குறித்து விமானப் படை மற்றும் கடற்படை தலைமைத் தளபதிகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனா்.
ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை உருவாக்குவதற்கு ஆயுதப் படைகளுக்கு எந்த விதமான அழுத்தமும் இருக்கக் கூடாது என்று விமானப் படைத் தலைமைத் தளபதி அமா்பிரீத் சிங் குறிப்பிட்டிருந்தாா்.
கருத்தரங்கின் நிறைவு அமா்வில் பேசிய முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌஹான், ‘முப்படைகளின் ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைப்பது குறித்து நிலவும் கருத்து வேறுபாடுகள், நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு தீா்க்கப்படும்’ என்று தெரிவித்தாா்.