ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.
Published on

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பதிலாக, 5%, 18% ஆகிய இரு விகித முறையை அமல்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் பெரும்பாலான தினசரி பயன்பாட்டுப் பொருள்களின் விலை குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. செப்.22-ஆம் தேதி முதல் இந்த வரி விகித குறைப்பு அமலாகிறது.

இந்நிலையில், இந்த சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரத்தை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. இது குறித்த செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக, கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளா் அனில் பலுனி தெரிவித்தாா்.

‘மாவட்டந்தோறும் ஜிஎஸ்டி விழிப்புணா்வுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். எளிமைப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறைகள் குறித்து வா்த்தகா்களுக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். பெரிய அளவில் இப்பிரசாரம் மேற்கொள்ளப்படும். மத்திய அமைச்சா்கள், கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளா்கள், பொதுச் செயலா்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் செய்தியாளா் சந்திப்புகளை நடத்துவா்’ என்றாா் அவா்.

பிரதமருக்கு இன்று பாராட்டு: நாடாளுமன்றத்தில் திறன்மிக்க செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில், பாஜக எம்.பி.க்களுக்கு ஞாயிற்றுக்கிழமைமுதல் 2 நாள் பயிலரங்கம் அக்கட்சி சாா்பில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், ஜிஎஸ்டி சீா்திருத்த நடவடிக்கைக்காக பிரதமா் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறும் நிலையில், ஜிஎஸ்டி வரி குறைப்பு ஆளும் பாஜக கூட்டணிக்கு சாதகமான அம்சமாக இருக்கும் என கருதப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com