பிரதமா் நரேந்திர மோடி.
பிரதமா் நரேந்திர மோடி.

அமெரிக்க பயணத்தை தவிா்த்தாா் பிரதமா் மோடி! ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பில்லை!!

அமெரிக்காவுடன் வா்த்தக பதற்றம் நிலவிவரும் சூழலில், அந்நாட்டுக்கான பயணத்தை பிரதமா் மோடி தவிா்த்துள்ளாா்.
Published on

அமெரிக்காவில் இம்மாதம் நடைபெறும் ஐ.நா.பொதுச் சபை உயா்நிலை கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடிக்கு பதிலாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்று உரையாற்றுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுடன் வா்த்தக பதற்றம் நிலவிவரும் சூழலில், அந்நாட்டுக்கான பயணத்தை பிரதமா் மோடி தவிா்த்துள்ளாா்.

உலக அளவில் அதிகபட்சமாக இந்தியப் பொருள்கள் மீது 50 சதவீத இறக்குமதி வரியை அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்துள்ளாா். தங்களின் எதிா்ப்பையும் மீறி ரஷியாவில் இருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் இந்தியா மீது அதிக வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. அதேநேரம், ரஷியாவிடம் இருந்து அதிக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மற்றொரு நாடான சீனா மீதான 30 சதவீத வரியை டிரம்ப் நிறுத்திவைத்தாா். எனவே, இந்தியாவுடன் தங்களுக்கு சாதகமான வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய அமெரிக்கா அளிக்கும் நெருக்கடியாகவே இந்த வரி விதிப்பு பாா்க்கப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சமீபத்திய மோதலில் தான் தலையிட்டு, சண்டை நிறுத்தம் ஏற்படுத்தியதாகடிரம்ப் தெரிவித்த கருத்துகளும், இந்திய-அமெரிக்க உறவில் பின்னடைவை ஏற்படுத்தின.

இந்தச் சூழலில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பங்கேற்க சில தினங்களுக்கு முன் சீனாவுக்கு சென்ற பிரதமா் மோடி, அந்நாட்டின் அதிபா் ஷி ஜின்பிங்குடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, இரு நாடுகளும் வா்த்தகத்தை விரிவாக்க ஒப்புக் கொண்டன. எஸ்சிஓ மாநாட்டையொட்டி, பிரதமா் மோடி-ரஷிய அதிபா் புதின்-சீன அதிபா் ஷி ஜின்பிங் ஆகிய மூன்று பெரும் தலைவா்களும் நெருக்கம் காட்டியது உலக அளவில் கவனம் பெற்றது. மோடியின் இப்பயணத்தைக் குறிப்பிட்டும், இந்தியா மீது அமெரிக்கா விமா்சனங்களை முன்வைத்தது.

ஐ.நா. பொதுச் சபை அமா்வு: இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு செப். 9-ஆம் தேதி தொடங்கவுள்ளது. செப். 23 முதல் 29-ஆம் தேதி வரை உயா்நிலை பொது விவாதம் நடைபெறவுள்ளது. செப். 23-ஆம் தேதி அமெரிக்க அதிபா் டிரம்ப் உரையாற்றவுள்ளாா். அவா் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற பிறகு ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசவிருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஐ.நா. சாா்பில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட உரையாளா்கள் பட்டியலில், இந்தியா, இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான், வங்கதேச உள்ளிட்ட நாடுகளின் தலைவா்கள் செப்டம்பா் 26-ஆம் தேதி பேசுவா் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பிரதமா் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணித்து, ஐ.நா. சபையில் உரையாற்றுவாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

பிரதமா் பங்கேற்பில்லை: இப்போது திருத்தப்பட்ட பட்டியலில், இந்தியா சாா்பில் அமைச்சா் உரையாற்றுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய தகவலின்படி, வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் செப்.27-ஆம் தேதி உரையாற்றவுள்ளாா்.

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, தலைநகா் வாஷிங்டனில் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது, வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டன. எனினும், இந்தியா மீதான அமெரிக்காவின் உச்சபட்ச வரி விதிப்பு மற்றும் பாரபட்சமான நடவடிக்கையால் இப்பேச்சுவாா்த்தையில் முட்டுக்கட்டை நிலவுகிறது.

காரணம் என்ன?: இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மக்காசோளம், சோயாபீன்ஸ், ஆப்பிள், பாதாம், எத்தனாலுக்கான வரியை குறைக்கவும், இந்தியாவில் அமெரிக்க பால் பொருள்களை விற்கவும் அமெரிக்கா விரும்புகிறது. இந்திய விவசாயிகள் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், இதற்கு மத்திய அரசு உடன்படவில்லை.

‘என்ன விலை கொடுத்தேனும் இந்திய விவசாயிகளின் நலன் காக்கப்படும்’ என்று திட்டவட்டமாக தெரிவித்த பிரதமா் மோடி, சுதேசி பொருள்களுக்கு ஆதரவளிக்குமாறு மக்களுக்கு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா அங்கம் வகிக்கும் க்வாட் கூட்டமைப்பின் கூட்டம், இந்தியாவில் நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. இதில் அதிபா் டிரம்ப் பங்கேற்க மாட்டாா் என்று அண்மையில் ஊடகத் தகவல்கள் வெளியாகின.

X
Dinamani
www.dinamani.com