
அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது அந்நாட்டின் அதிபர் டொனால்ட் டிரம்ப் மொத்தம் 50 சதவீதம் வரியை விதித்தாா். இந்தக் கூடுதல் வரி விதிப்பு ஆக.27-இல் அமலுக்கு வந்தது. இந்த நடவடிக்கை அமெரிக்காவுடன் வா்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மோடியுடன் தனிப்பட்ட முறையிலும் நல்ல நட்பு பூண்டிருந்த டிரம்ப்புக்கு, இப்போது வரி விதிப்பு நடவடிக்கைகளால் உறவு பாதிக்கப்பட்டதாக பரவலாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் நானும் நண்பராக இருப்போம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதே கருத்தை பிரதமர் நரேந்திர மோடியும் பிரதிபலித்துள்ளார்.
இந்த நிலையில், இது குறித்தும் சமாஜவாதி கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் இன்று(செப். 6) செய்தியாளர்களுடன் பேசியதாவது: “அமெரிக்கா பெருவணிகத்தில் ஈடுபடுகிறது. அந்நாடு முதலீட்டாளர்களின் தலைவன் என்றும் சொல்லலாம். அங்கே சொத்தும் பணமும் உருவாக்கப்படுகிறது.
அமெரிக்காவில் மிகப்பெரிய மனிதர்கள் கனவு காணுகிறார்கள். அங்குள்ள மக்கள் தங்கள் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறார்கள்.இதன் விளைவாக, அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, வசதிகள், சுகாதாரம், கல்வி உள்பட பல துறைகள் அங்கு உலகின் சிறந்தவையாக திகழ்கின்றன. அப்படிப்பட்ட நாட்டுடனான உறவு எப்போதும் சீர்குலையக்கூடாது.
ஆயினும், நமது நாட்டின் எல்லைக்குள்பட்ட நிலத்தின் மீது கண் வைத்து காத்திருக்கும் சில நாடுகள், நமது சந்தைகளில் ஆதிக்கம் செலுத்தும் சில நாடுகள் மீது நாம் கவனமாக இருத்தல் வேண்டும்.
நாம் எப்போதும் நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். அதேவேளையில், பெருமளவிலான வர்த்தகம் பூண்டுள்ள அமெரிக்கா போன்றதொரு நாட்டை புறந்தள்ள நம்மால் முடியாது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.