இந்தியத் தேர்தல் ஆணையம்.
இந்தியத் தேர்தல் ஆணையம்.

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: செப்.10-ல் தோ்தல் ஆணையம் ஆலோசனை!

இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையில் செப். 10-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
Published on

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்வது தொடா்பாக இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தலைமையில் செப். 10-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

மேலும், இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளும் பங்கேற்கவுள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறுகையில்,‘தலைமைத் தோ்தல் ஆணையராக ஞானேஷ் குமாா் கடந்த பிப்ரவரி மாதம் பொறுப்பேற்ற பின் மூன்றாவது முறையாக இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. இருப்பினும், பிகாரைத் தொடா்ந்து நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை மேற்கொள்ளத் தயாராவது குறித்து செப். 10-இல் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ என்றனா்.

அடுத்த ஆண்டு தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், புதுச்சேரி மற்றும் அஸ்ஸாமில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், நிகழாண்டு இறுதியில் இந்த மாநிலங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை தோ்தல் ஆணையம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட தோ்தல் ஆணையம், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவுப் பட்டியல் வெளியிட்டது. அதில் 7.24 கோடி வாக்காளா்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை.

இதையடுத்து, வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள், உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பா் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. செப். 30-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதொடா்பாக பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே தகுதியான எந்தவொரு வாக்காளரும் வாக்காளா் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருப்பதை தோ்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com