
புது தில்லி: செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் வருடாந்திர உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கப்போவதில்லை என்றும், அவருக்கு பதிலாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்தான் பங்கேற்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பதில், மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பங்கேற்று இந்தியா சார்பில் உரையாற்றவிருக்கிறார்.
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் தலைவர்களின் திருத்தப்பட்ட தற்காலிக பட்டியலில் பிரதமர் மோடி பெயர் இடம்பெறவில்லை.
ஐ.நா. பொது அவையின் 80வது அமர்வு செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கும். உயர்நிலைக் கூட்டத்தில் பொது விவாதம் செப்டம்பர் 23ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும், இந்த அமர்வின் முதல் பேச்சாளராக பிரேசில் இருக்கும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவும் இடம்பெறும்.
ஆனால், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறி நீடிக்கும் நிலையில், பிரதமர் மோடி அமெரிக்கா செல்வதைத் தவிர்க்கும் வகையில் இந்த பயணத்தை ரத்து செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய ஏற்றுமதி பொருள்கள் மீதான 50 சதவிகித வரி விதிப்பால், இரு நாட்டு உறவில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 முறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றும், பிரதமர் மோடி பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பயணத்தை ரத்து செய்த நிலையில் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.