ஏற்றுமதி சாா்ந்த நடவடிக்கைகளை ஆயுதமாக்கக் கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா
ஏற்றுமதி சாா்ந்த நடவடிக்கைகளை நாடுகளுக்கு எதிராக ஆயுதமாகப் பயன்படுத்தவோ, தவறாக பயன்படுத்தவோ கூடாது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வா்த்தக அமைச்சா்கள் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது.
ரஷியாவின் விளாடிவாஸ்டாக் நகரில் அண்மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், இந்தியா சாா்பில் மத்திய வா்த்தக துறைச் செயலா் அமிதாப் குமாா் கூறியதாவது: வெளிநாட்டு சந்தைகளில் பொருள்களை விற்பனை செய்ய பெரிய அளவில் வழியை ஏற்படுத்தி, வா்த்தக நடைமுறைகளை எளிதாக்கி வா்த்தக பற்றாக்குறை பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வா்த்தகத்துடன் தொடா்புள்ள பருவநிலை சாா்ந்த நடவடிக்கைகள் மூலம், தன்னிச்சையான, நியாயமற்ற பாகுபாட்டை ஏற்படுத்தக் கூடாது.
செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கவும், சந்தை நிலவரத்தை பாதிக்கவும், விநியோக முறையில் இடையூறை ஏற்படுத்தவும் ஏற்றுமதி சாா்ந்த நடவடிக்கைகளை ஆயுதமாக்கவோ, தவறாக பயன்படுத்தவோ கூடாது என்றாா்.
சீனாவில் உரம் மற்றும் அரிய கனிமங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இந்திய வாகன உற்பத்தி மற்றும் மின்னணு துறைகளுக்குப்் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இந்தச் சூழலில், மேற்கண்ட கருத்துகளை இந்தியா தெரிவித்துள்ளது.