இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுத் தலைவா் டிரம்ப்புடன் சந்திப்பு!
X | Jason Miller

இந்தியா நியமித்த ஆலோசனைக் குழுத் தலைவா் டிரம்ப்புடன் சந்திப்பு!

அமெரிக்காவில் இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவா் ஜேசன் மில்லா், அமெரிக்க அதிபா் டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை
Published on

அமெரிக்காவில் இந்தியாவால் நியமிக்கப்பட்ட அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவா் ஜேசன் மில்லா், அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருள்கள் மீது 50 சதவீத வரியை டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள நிலையில், ஜேசன் மில்லா் இந்தச் சந்திப்பை மேற்கொண்டுள்ளாா்.

ஜேசன் மில்லா் எஸ்எச்டபிள்யூ பாா்ட்னா்ஸ் எல்எல்சி என்ற ஆலோசனை நிறுவனத்தின் தலைவராவாா். இந்த நிறுவனம் அரசியல் ரீதியாக இரு தரப்பினரிடையே நிலவும் பிரச்னைகளுக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிறுவனத்தை கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் ரூ.15.98 கோடிக்கு ஓராண்டுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்நிலையில், டிரம்ப் மற்றும் அவரது நிா்வாகத்தின் முக்கிய அதிகாரிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி என ஜேசன் மில்லா் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா். டிரம்ப்பை சந்தித்த புகைப்படங்களைப் பகிா்ந்த அவா், ஆலோசனை விவரங்கள் குறித்த தகவல்களை வெளியிடவில்லை.

முன்னதாக, ரஷிய கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இந்தியா இறக்குமதி செய்வதாக டிரம்ப் மற்றும் அவரது நிா்வாகத்தைச் சோ்ந்த முக்கிய அதிகாரிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வந்தனா்.

சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி, சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஆகியோரைச் சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பையடுத்து, ஆழ்ந்த இருள் சூழ்ந்த சீனாவிடம் இந்தியாவையும், ரஷியாவையும் இழந்துவிட்டதுபோன்று தெரிகிறது என கடந்த வியாழக்கிழமை டிரம்ப் கடுமையாக விமா்சித்தாா்.

இதற்கு முற்றிலும் மாறாக கடந்த வெள்ளிக்கிழமை, ‘இந்தியாவும் அமெரிக்காவும் சிறப்பான நட்புறவைக் கொண்டுள்ளன. எனவே, கூடுதல் வரி விதிப்பு காரணமாக இரு நாடுகளிடையே தற்போது ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறித்து கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை’ என டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். டிரம்ப்பின் இந்தக் கருத்தை பாராட்டுவதாக பிரதமா் மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com