
பஞ்சாப் மாநிலத்தில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குர்தாஸ்பூர் மாவட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வரும் செப். 9 ஆம் தேதி செல்கிறார்.
தொடர்ந்து பிரதமர் மோடி, நிவாரணப் பணிகளையும் கண்காணிக்க இருப்பதாகவும் பஞ்சாப் மாநில பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் மாநில பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில், ”பிரதமர் நரேந்திர மோடி செப். 9 ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு வருகை தரவுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் விவசாயிகளையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளார்.
வெள்ளப் பாதிப்பு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்வார். பிரதமரின் பஞ்சாப் பயணமானது, பாஜக அரசு எப்போதும் பஞ்சாப் மக்களுடன் இருப்பதை நிரூக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இமயமலையையொட்டிய ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில வாரங்களாக பலத்த மழையால் பெருவெள்ளமும் நிலச்சரிவுகளும் நேரிட்டுள்ளன. அண்டை மாநிலமான பஞ்சாபும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவையாக மாநில அரசு அறிவித்துள்ளது. 1.48 லட்சம் ஹெக்டேருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 1,400-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஹிமாசல பிரதேசத்தில் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 5,200-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 1,000 வீடுகள் முழுமையாக இடிந்துவிட்டன.
1,200-க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக மண்டியில் 281, சிம்லாவில் 261, குலுவில் 231 சாலைகள் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.