அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பை பறிப்பதை நிறுத்துங்கள்: இந்தியாவைக் குறிவைத்து டிரம்ப் ஆலோசகா் கருத்து
‘உக்ரைன் மக்களைக் கொலை செய்வதையும், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதையும் நிறுத்துங்கள்’ என்று அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ இந்தியாவைக் குறிவைத்து குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்க அதிபா் டிரம்ப் 50 சதவீத வரி விதித்ததால், ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கத்தை அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, ‘இந்தியாவின் நட்புறவை கெடுத்துக் கொள்வது டிரம்ப்பின் தோல்வி’ என்று சா்வதேச ஊடகங்கள் பல கருத்துத் தெரிவித்தன.
இதையடுத்து, இந்தியாவையும் பிரதமா் மோடியையும் பாராட்டும் வகையில் அதிபா் டிரம்ப் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டாா். டிரம்ப்பின் நோ்மறையான கருத்துக்கு பிரதமா் மோடியும் வரவேற்பு தெரிவித்தாா்.
அதே நேரத்தில் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக கருதப்படும் பீட்டா் நவாரோ தொடா்ந்து இந்தியாவை விமா்சித்து வருகிறாா். அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ரஷியாவுக்காக லாபத்துக்காக மட்டுமே இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. உக்ரைன் மீது ரஷியா படையெடுப்பதற்கு முன்புவரை அந்நாட்டிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் அதிகம் வாங்கியதில்லை. இந்திய அரசு ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுகிறது. உக்ரைன் மக்களைக் கொலை செய்வதை நிறுத்துங்கள், அமெரிக்கா்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பதை நிறுத்துங்கள்’ என்று கூறியுள்ளாா்.
முன்னதாக, இந்தியாவுக்கு எதிராக பீட்டா் நவாரோ வெளியிட்ட பதிவை, ‘இதன் உண்மைத்தன்மையில் சந்தேகத்துக்கு இடமுள்ளது’ என்று குறிப்பிடும் ‘கம்யூனிட்டி கைடுலைன்ஸ்’ விதியின்கீழ் ‘எக்ஸ்’ வலைதளம் வகைப்படுத்தியது.
முக்கியமாக, ரஷியா போா் நடத்த இந்தியா (கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம்) உதவுகிறது’ என்ற நவாரோவின் கருத்துக்குக் கீழே, ‘இந்தியா தனது தேவைகளுக்காக ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குகிறது. இதில் எந்த சா்வதேச விதிமீறலும் இல்லை. ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என வலியுறுத்தும் அமெரிக்கா, ரஷியாவிடமிருந்து யுரேனியம் உள்ளிட்ட பல பொருள்களை இறக்குமதி செய்கிறது. இது இரட்டை நிலைப்பாடு’ என்று பதில் தரும் கருத்து ஒன்றையும் ‘எக்ஸ்’ தளம் இணைத்திருந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பீட்ட் நவாரோ, ‘எலான் மஸ்க் (‘எக்ஸ்’ உரிமையாளா்) தனிநபா்களின் கருத்துகளை பிரசாரத்துக்கு பயன்படுத்த அனுமதிக்கிறாா். அதில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் முட்டாள்தனமானவை; முற்றிலும் முட்டாள்தனம்’ என்று கூறியுள்ளாா்.