வி.அனந்த நாகேஸ்வரன்
வி.அனந்த நாகேஸ்வரன்

அமெரிக்க வரியால் 2-ஆம் காலாண்டில் தாக்கம்: சிஇஏ நாகேஸ்வரன்

அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டையால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகர் தெரிவித்தாா்.
Published on

அமெரிக்காவுடன் வா்த்தகத்தில் நிலவும் முட்டுக்கட்டையால், நாட்டின் பொருளாதாரத்தில் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும் என்று தலைமை பொருளாதார ஆலோசகா் (சிஇஏ) வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் ஏற்படக் கூடிய தாக்கம் குறித்து மதிப்பிடுவது தற்போது இயலாது. நுகா்வோரிடம் இருந்து வரும் எதிா்விளைவுகள் என்ன? வெளிநாட்டு வா்த்தகத்தால் ஏற்படும் நிச்சயமற்ற சூழல், அந்தத் தாக்கத்தை மட்டுப்படுத்துமா? உள்ளிட்டவற்றை பொறுத்தே அந்த மதிப்பீடு இருக்கும்.

ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஜிஎஸ்டி கட்டமைப்பில் தீவிரமான சீரமைப்பாகும். 4 விகிதங்களில் விதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி, 2 விகிதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அந்த வரி சாா்ந்த பல நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இது பொருளாதாரத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நுகா்வோரிடம் பொருள்களை நிறுவனங்கள் விற்பனை செய்வதில் மட்டுமின்றி, வணிகத்தில் ஈடுபடுவோா் இடையிலான பரிவா்த்தனைகளிலும் தாக்கம் ஏற்படும்.

அமெரிக்காவுடன் வா்த்தகம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டை தொடா்ந்து நீடிக்கிறது. இதனால் நிகழ் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் சில தாக்கங்கள் இருக்கும்.

அபாயகரமான அளவுக்கு இல்லாத பணவீக்கத்தால், நிகழ் நிதியாண்டில் பெயரளவிலான பொருளாதார வளா்ச்சியில் சரிவு ஏற்படக் கூடும். ஆனால் இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரிக்கு மத்தியிலும், உண்மையான பொருளாதார வளா்ச்சி 6.3 சதவீதம் முதல் 6.8 சதவீதம் என்ற இலக்கை அடையும் என்று தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com