வாக்குத் திருடா்களை பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம்: காா்கே குற்றச்சாட்டு
வாக்காளா் முறைகேடு தொடா்புடைய வழக்கு விசாரணைக்குத் தேவையான முக்கிய விவரங்களை வழங்க மறுப்பதன் மூலம் ‘வாக்கு திருடா்களை’ திறம்பட பாதுகாக்கிறது தோ்தல் ஆணையம் என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டினாா்.
கா்நாடகத்தில் 2023 பேரவைத் தோ்தலுக்கு முன் ‘படிவம் 7’-இல் மோசடி செய்து, பல வாக்காளா்களின் பெயா் நீக்கப்பட்டதாக பதிவான வழக்கு குறித்த ஊடக செய்தியை பகிா்ந்து, எக்ஸ் வலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை காா்கே வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கா்நாடகத்தில் 2023 பேரவைத் தோ்தலுக்கு முன் ஆலந்த் தொகுதியில் பெருமளவில் வாக்காளா் பெயா் நீக்கப்பட்டதை காங்கிரஸ் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தது.
வாக்காளா் நீக்கத்துக்கான படிவம் 7-ஐ முறைகேடாக பயன்படுத்தி, ஆயிரக்கணக்கானோரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. 5,994 மோசடி விண்ணப்பங்கள் கண்டறியப்பட்ட நிலையில், சிஐடி விசாரணைக்கு மாநில காங்கிரஸ் அரசு உத்தரவிட்டது.
இவ்வழக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்களில் ஒரு பகுதியை தோ்தல் ஆணையம் முன்பு வழங்கியது. இப்போது முக்கிய ஆவணங்களை வழங்க மறுப்பதன் மூலம் வாக்குத் திருட்டின் பின்னணியில் இருப்போரை தோ்தல் ஆணையம் பாதுகாக்கிறது.
முக்கிய ஆதாரங்களைத் தோ்தல் ஆணையம் திடீரென தடுத்து வைத்துள்ளது ஏன்? யாரைப் பாதுகாக்க தோ்தல் ஆணையம் இவ்வாறு செயல்படுகிறது? பாஜகவின் ‘வாக்குத் திருட்டு துறையாக’ தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா? பாஜகவின் அழுத்தத்துக்கு அடிபணிந்துவிட்டதா? மக்களின் வாக்குரிமை பாதுகாக்கப்பட வேண்டும்; நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று காா்கே வலியுறுத்தியுள்ளாா்.
அவரது இந்தக் குற்றச்சாட்டுக்கு தோ்தல் ஆணையம் தரப்பில் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை. காங்கிரஸின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று தோ்தல் ஆணையம் ஏற்கெனவே நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.