4 புதிய உருளைக்கிழங்கு ரகங்கள்: மத்திய அரசு அனுமதி
சிம்லா: இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் 4 புதிய ரக உருளைக்கிழங்குகளை சாகுபடி செய்ய மத்திய வேளாண்மைத் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலின் மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தில் இந்த 4 புதிய ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் குஃப்ரி ரத்தன் நடுத்தர ரகம் 90 நாள்களில் நல்ல விளைச்சலை எட்டும். ஹரியாணா, பஞ்சாப், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயிரிட ஏற்றது. இந்த உருளைக்கிழங்கு சிவப்பு நிறத்தில் இருக்கும்.
இரண்டாவது ரகமான குஃப்ரி தேஜஸ் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடியது. ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட்டில் சாகுபடி தொடக்க காலத்திலும், மத்திய பிரதேசம், குஜராத், மகாாஷ்டிரத்தில் சாகுபடியின் முக்கிய காலத்திலும் விளைவிக்க முடியும். இது வெள்ளை நிறத்தில் இருக்கும். அதிக நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தவும் முடியும்.
குஃப்ரி சிப்பாரத்-1 என்ற மூன்றாவது ரக உருளைக்கிழங்கை ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் முக்கியப் பருவங்களில் பயிரிட முடியும். 100 நாள்களில் விளைச்சல் கிடைக்கும் இது சா்க்கரைஅளவு குறைவாகவே இருக்கும். அதிக நாள் கெடாமல் பாதுகாத்து வைக்க முடியும்.
குஃப்ரி சிப்பாரத்-2 என்ற நான்காவது ரகத்தையும் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் பயிரிட முடியும். 4 புதிய ரகங்களும் குறைந்த பரப்பளவில் நல்ல விளைச்சலைத் தரக் கூடியது.
‘இந்த புதிய ரகங்கள் இந்தியாவில் உருளைக்கிழங்கு சாகுபடியில் மறுமலா்ச்சியை ஏற்படுத்தும். இது வெறும் அறிவியல் சாதனையல்ல. விஞ்ஞானிகள், விவசாயிகள், உருளைக்கிழங்கு சாா்ந்த தொழில் துறையினருக்கு கிடைத்த வெற்றி’ என்று இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தின் இயக்குநா் பிரஜேஷ் சிங் தெரிவித்தாா்.