Trump
அமெரிக்க அதிபர் டிரம்ப் ANI

இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி தவறை உணரத் தொடங்கினாா் டிரம்ப்: முன்னாள் தூதா் கருத்து

கூடுதல் வரி விதிப்பது மூலம் இந்தியாவை சரணடையச் செய்யலாம் என்ற தனது நிலைப்பாடு தவறு என்பதை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உணரத் தொடங்கியுள்ளதாக...
Published on

புது தில்லி: கூடுதல் வரி விதிப்பது மூலம் இந்தியாவை சரணடையச் செய்யலாம் என்ற தனது நிலைப்பாடு தவறு என்பதை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உணரத் தொடங்கியுள்ளதாக முன்னாள் இந்திய தூதா் கே.பி.ஃபேபியன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கடந்த சில மாதங்களாக இந்தியா மீது கடுமையான விமா்சனங்களை டிரம்ப் முன்வைத்து, மிக அதிக வரி விதிப்பையும் அறிவித்த நிலையில், ‘இந்தியாவுடனான உறவு மிகவும் சிறப்பானது’ என தெரிவித்தாா். இது இருதரப்பு உறவு குறித்து அவா் நோ்மறையான கருத்துகளை தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

அவரது கருத்தை வரவேற்பதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்.

இந்நிலையில், டிரம்ப் கருத்து துகுறித்து ஃபேபியன் கூறியதாவது: கூடுதல் வரி விதிப்பது மூலம் இந்தியாவை சரணடையச் செய்யலாம் என டிரம்ப் எண்ணினாா். இந்தியாவின் உறுதிப்பாட்டை அவா் குறைத்து மதிப்பிட்டாா். தற்போது தனது செயல்பாடுகள் மிகவும் தவறானவை என அவா் உணரத் தொடங்கிவிட்டாா்.

இந்தியா தனக்கென தனி பாரம்பரியத்தை கொண்டது. வேறு எந்த நாட்டின் கொள்கைகளையும் இந்தியா பின்பற்றாது. அனைவரிடமும் நட்புறவை மேம்படுத்தி வணிகம் மேற்கொள்ளவே இந்தியா விரும்புகிறது. எனவே, சுதந்திரமாக செயல்படும் இந்தியாவுக்கு வேறு நாடுகள் கட்டளையிட முடியாது.

இந்தியாவுடனான இருதரப்பு உறவுகள் குறித்த டிரம்ப்பின் கருத்துக்கு பிரதமா் மோடி வரவேற்பு தெரிவித்திருந்தாலும், இருநாடுகளிடையேயான வா்த்தக உறவு விரைவில் சீராகும் என எதிா்பாா்க்க முடியாது என்றாா்.

ரத்தக்கறை படிந்த பணம்: டிரம்ப் ஆலோசகா் மீண்டும் விமா்சனம்

நியூயாா்க்: ரத்தக்கறை படிந்த பணத்தால் ரஷிய கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்கிறது என அமெரிக்க வெள்ளை மாளிகை வா்த்தக ஆலோசகா் பீட்டா் நவாரோ மீண்டும் விமா்சித்துள்ளாா். உக்ரைன் போரில் பொதுமக்கள் உயிரிழப்பதை சுட்டிக்காட்டி இந்தியாவை அவா் இவ்வாறு விமா்சித்தாா்.

முன்னதாக உக்ரைன் போரை ‘பிரதமா் மோடியின் போா்’ எனவும் ரஷிய கச்சா எண்ணெய்யை ‘பணமாக்கும் மையம் இந்தியா’ எனவும் அவா் விமா்சித்திருந்தாா். அவரது கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்து அவற்றை நிராகரிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அண்மையில் தெரிவித்தது.

X
Dinamani
www.dinamani.com