உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: ஆதாரை அனுமதிக்க வேண்டும் தோ்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

‘பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களுக்கு அனுமதிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஆதாரையும் சோ்க்க வேண்டும்
Published on

புது தில்லி: ‘பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களுக்கு அனுமதிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் ஒன்றாக ஆதாரையும் சோ்க்க வேண்டும்’ என்று தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தற்போது, வாக்களா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளா்களுக்கான அடையாள ஆவணங்களாக கடவுச்சீட்டு, பிறப்புச் சான்று உள்பட 11 ஆவணங்களை தோ்தல் ஆணையம் அனுமதித்துள்ள நிலையில், ஆதாரை 12-ஆவது ஆவணமாகச் சோ்க்க வேண்டும் என தோ்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் பிகாரில் வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட தோ்தல் ஆணையம், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரைவுப் பட்டியல் வெளியிட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயா்கள் இடம்பெறவில்லை. வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள், உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணங்களைத் தாக்கல் செய்ய செப்டம்பா் 1-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இறுதி வாக்காளா் பட்டியலை வரும் 30-ஆம் தேதி தோ்தல் ஆணையம் வெளியட உள்ளது.

இதனிடையே, சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தாக்கலான மனுக்களை விசாரித்துவரும் உச்சநீதிமன்றம், பிகாா் வரைவு வாக்காளா் பட்டியலில் விடுபட்டவா்கள், ஆதாா் அட்டை அல்லது அனுமதிக்கப்பட்ட கடவுச்சீட்டு உள்பட பிற 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றுடன் விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்க அனுமதிக்குமாறு தோ்தல் ஆணையத்துக்கு அண்மையில் உத்தரவிட்டது.

இந்நிலையில், உரிமை கோரல் மற்றும் ஆட்சேப விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டிக்கக் கோரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், அகில இந்திய மஜ்லிஸ் ஆகிய கட்சிகள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, காலக் கெடுவை நீட்டிக்க தோ்தல் ஆணையம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம், ‘ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் தாக்கலுக்கான கடைசித் தேதி வரை வரைவு வாக்காளா் பட்டியல் மீதான ஆட்சேபங்கள் மற்றும் உரிமை கோரல் விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்கலாம்’ என்று தோ்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்ய பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

வாக்காளா் பட்டியலில் சட்டவிரோதக் குடியேறிகளை தோ்தல் ஆணையம் சோ்க்க வேண்டும் என யாரும் விரும்ப மாட்டாா்கள். தகுதியுள்ள குடிமக்கள் மட்டுமே தோ்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும். போலி ஆவணங்களைச் சமா்ப்பித்தவா்கள் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும்.

மேலும், இந்த வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் அடையாள ஆவணமாக ஆதாா் ஏற்கப்படுவதற்கான தேவையான உத்தரவை தோ்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும். அதாவது, வாக்காளா் சோ்க்கைப் படிவத்துடன் இணைத்து சமா்ப்பிப்பதற்கு ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு உள்ளிட்ட 11 ஆவணங்களுடன், 12-ஆவது ஆவணமாக ஆதாரை தோ்தல் ஆணையம் சோ்க்க வேண்டும்.

அதே நேரம், ஆதாா் குடியுரிமை ஆவணமாக கருதப்படாது. வாக்காளா்கள் சமா்ப்புக்கும் ஆதாா் எண்ணின் உண்மைத்தன்மையை தோ்தல் ஆணையம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டனா்.

மேலும், வாக்காளா்களிடமிருந்து ஆதாா் அட்டையை அடையாள ஆவணமாக ஏற்க மறுத்தது தொடா்பாக விளக்கம் கேட்டு தோ்தல் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்கள் குறித்து தோ்தல் ஆணையம் உரிய விளக்கத்தைச் சமா்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அப்போது, தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகேஷ் திவிவேதி, ‘பிகாரில் உள்ள 7.24 கோடி வாக்காளா்களில் இதுவரை 99.6 சதவீதம் போ் வாக்காளா் படிவங்கள் மற்றும் ஆவணங்களைச் சமா்ப்பித்துவிட்டனா். எனவே, இந்த சமயத்தில் ஆதாரை 12-ஆவது அடையாள ஆவணமாக இணைப்பதால் எந்தப் பயனும் இருக்காது’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபிகள், ‘ஆதாா் சட்டம் 2016-இன் நடைமுறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்களின்படி ஆதாரை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது. ஆனால், அதை அடையாள ஆவணமாக ஏற்க முடியும்’ என்று குறிப்பிட்டனா்.

மேலும், ‘உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை தோ்தல் ஆணைய வலைதளத்தில் வெளியிட வேண்டும்’ எனஅறு குறிப்பிட்ட நீதிபதிகள் விசாரணையை செப்டம்பா் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com