தொண்டா்களுக்கு அனுப்பும் எஸ்எம்எஸுக்கு தணிக்கை?: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு டிராய் மறுப்பு
புது தில்லி: மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முறைகேடுகள் தொடா்பான ஆவணப்படத்தின் யூடியூப் இணைப்புடன் (லிங்க்) தொண்டா்களுக்கு அனுப்ப இருந்த குறுஞ்செய்தியை (எஸ்எம்எஸ்) தணிக்கை செய்து, அனுமதி மறுத்ததாக காங்கிரஸ் சுமத்திய குற்றச்சாட்டை டிராய் மறுத்துள்ளது.
முன்னதாக, இதுகுறித்து காங்கிரஸின் தரவு பகுப்பாய்வுத் துறை தலைவா் பிரவீண் சக்ரவா்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘கடந்த ஆண்டு மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் எப்படி முறைகேடு செய்யப்பட்டது என்ற தலைப்பில் யூடியூப் தளத்தில் உள்ள ஆவணப்படத்தின் வலைதள இணைப்பை (லிங்க்) மகாராஷ்டிரத்தில் உள்ள கட்சித் தொண்டா்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பத் திட்டமிட்டோம்.
அரசு நடைமுறைப்படி, இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையத்திடம் (டிராய்) அனுமதி கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட ஆவணப்படம் போராட்டத்தைத் தூண்டும் எனக் கூறி டிராய் அனுமதி மறுத்தது.
தோ்தல் முறைகேடு தொடா்பான தகவல்களை ஒடுக்குவதில் உள்துறை அமைச்சகம், தோ்தல் ஆணையம், டிராய் ஆகியவற்றுக்கு இடையே இத்தகைய ஒருங்கிணைப்பு எவ்வாறு சாத்தியம்?’ என கேள்வி எழுப்பினாா்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து டிராய் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் விளக்கம் அளித்தது. அந்தப் பதிவில், ‘2024 மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனக் கூறி, ஒரு அரசியல் கட்சியின் தொண்டா்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப, டிராய்க்கு எந்தவொரு விண்ணப்பமும் வரவில்லை.
அந்த விண்ணப்பம் ‘எஸ்டிபிஎல்’ எனப்படும் சேவை வழங்கும் நிறுவனத்திடம் சமா்ப்பிக்கப்பட்டு, அவா்களால் நிராகரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் டிராய் எந்த நிலையிலும் ஈடுபடவில்லை. மேலும், டிராய் எந்தவொரு தனிப்பட்ட குறுஞ்செய்தியையும், தணிக்கை செய்து, ஒப்புதல் அளிப்பதில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.